தமிழ்நாடு

கணவரும் உடன் இருக்கலாம் என்ற விளம்பரத்தை பார்த்து சேர்த்தனர்: பிரசவத்தின்போது இளம்பெண் உயிரிழப்பு

Published On 2023-11-25 10:10 GMT   |   Update On 2023-11-25 10:10 GMT
  • சுகன்யா சுயநினைவு இன்றி இருந்ததால் வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்க்கும் படி சுகன்யாவின் உறவினர்கள் மற்றும் அவரது கணவர் அஜித்திடம் கூறியுள்ளனர்.
  • திடீரென பெண்ணின் கணவர் அஜித் லாரியின் முன்பு பாய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை:

செங்குன்றம் பாடியநல்லூர் பாலகணேசன் நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் அஜித். இவரது மனைவி சுகன்யா. இருவருக்கும் 27 வயது ஆகிறது.

இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகிறது. இந்த நிலையில் சுகன்யா கர்ப்பமானார். முதல் 5 மாதங்கள் மாதவரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியின் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தள பக்கத்தில் பிரசவத்தின் போது பெண்ணின் கணவர் உடன் இருந்து பிரசவத்தை பார்த்து கொள்ளலாம் என விளம்பரம் செய்திருப்பதை பார்த்தனர்.

இதையடுத்து அஜித் அவரது மனைவி சுகன்யாவை அந்த ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். கடந்த 4 மாதமாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த 16-ந்தேதி சுகன்யாவுக்கு பிரசவ வலி ஏற்படவே அன்று ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சில ஊசிகள் போடப்பட்ட நிலையில் திடீரென சுகன்யாவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சுகன்யா மயக்கம் அடைந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்ததாக தெரிகிறது. இதில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் சுகன்யா சுயநினைவு இன்றி இருந்ததால் வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்க்கும் படி சுகன்யாவின் உறவினர்கள் மற்றும் அவரது கணவர் அஜித்திடம் கூறியுள்ளனர்.

இதனால் அந்த ஆஸ்பத்திரி மருத்துவர்கள் பரிந்துரை செய்ததன் பேரில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதித்து சுயநினைவு இன்றி இருந்த சுகன்யாவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை சுகன்யா பரிதாபமாக உயிரிழந்தார். சுகன்யாவிற்கு பிறந்த ஆண் குழந்தையும் இங்குபேட்டர் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுகன்யாவின் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று சமரச பேச்சு நடத்தினர்.

திடீரென பெண்ணின் கணவர் அஜித் அந்த வழியே வந்த லாரியின் முன்பு பாய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தனது மனைவி உயிரிழந்ததாகவும் எனவே சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அஜித் போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

Tags:    

Similar News