தமிழ்நாடு செய்திகள்

வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த வாஷிங் மெஷின்... பல ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

Published On 2023-12-09 10:36 IST   |   Update On 2023-12-09 10:36:00 IST
  • திடுக்கிட்டு எழுந்த சிவகுருநாதன் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.
  • மின் கசிவு காரணமாக வாஷிங் மெஷின் வெடித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் கீழவாசல் கவாஸ்காரத்தெருவை சேர்ந்தவர் சிவகுருநாதன் (வயது 55). இவர் கீழவாசல் கடைவீதியில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் கீழ் பகுதியில் மாமனார் சுந்தரம், மாமியார் கமலம் வசித்து வருகின்றனர். மாடி வீட்டில் சிவகுருநாதன் மனைவியுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை சிவருநாதன் மனைவி புவனேஸ்வரி வாஷிங் மெஷினில் துணியை போட்டு சுவிட்ச் போட்டு விட்டு நடைப்பயிற்சிக்காக வெளியில் சென்றார். அப்போது சிறிது நேரத்தில் வாஷிங் மெஷின் பயங்கர சத்தத்துடன் வெடித்து எரிய தொடங்கியது. வீடு முழுவதும் புகை மூட்டமாகியது .

திடுக்கிட்டு எழுந்த சிவகுருநாதன் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். மேலும் அக்கம் பக்கத்தினரும் அங்கு திரண்டனர்.

தகவலின் பேரில் தீயணைப்பு படை நிலைய அதிகாரி கணேசன் இளங்கோ மற்றும் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாஷிங்மெஷின் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வாஷிங் மெஷின் முற்றிலும் எரிந்து சேதமானது. இதேப்போல் சோபா, டி.வி, கட்டில், மெத்தை , துணிமணிகள் ஆகியவையும் எரிந்து நாசமாகின.

இவற்றின் மதிப்பு பல ஆயிரம் இருக்கும் என தெரிகிறது. இந்த பயங்கர தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை.

இது குறித்து கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக வாஷிங் மெஷின் வெடித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News