விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரம்- சென்னையில் 10 ஆயிரம் சிலைகள் நிறுவ முடிவு
- அடுத்த மாதம் 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா தொடங்குகிறது.
- தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைக்காக வைக்கப்படுகின்றன.
விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட பல்வேறு அமைப்பினரும் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.
இதையடுத்து விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் கொசப்பேட்டை பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்ட போதிலும் பெரிய அளவிலான சிலைகளின் பாகங்கள் வெளியூர்களில் இருந்தே வரவழைக்கப்பட்டு ஒன்றாக்கி பின்னர் விற்பனை செய்யப்படுகிறது.
திருத்தணி, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பண்ருட்டி, கள்ளக்குறிச்சி பகுதிகளிலும் அதிக அளவில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகிறது.
சென்னை பகுதியான எர்ணாவூர் கிரிஜா நகரில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகளில் 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். 3 அடியில் இருந்து 10 அடி உயரம் வரையிலான சிலைகள் இங்கு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் வெளியூர்களில் இருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். எர்ணாவூரில் மட்டும் தற்போது 300 சிலைகளை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சிலைகளின் தலை, கைகள், உடல் பகுதி உள்ளிட்டவைகளை ஒன்றாக்கி வர்ணம் தீட்டி அதனை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
அடுத்த மாதம் 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா தொடங்குகிறது. அன்று தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைக்காக வைக்கப்படுகின்றன. பின்னர் இந்த சிலைகள் ஒரு வார காலம் வைத்து பூஜை செய்யப்படும். பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை இந்து அமைப்பினர் தற்போதே தொடங்கியுள்ளனர். இந்து முன்னணி மற்றும் பாரத் இந்து முன்னணி அமைப்பினர் இது தொடர்பான ஆலோசனை கூட்டங்களை நேற்று நடத்தினர்.
இந்த கூட்டத்தில் 2 அமைப்புகளை சேர்ந்தவர்களும் தங்களது அமைப்புகளின் சார்பில் சென்னையில் தனித்தனியாக 5 ஆயிரம் சிலைகளை வைக்க முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் சென்னையில் மட்டும் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் 10 ஆயிரம் சிலைகளை வைத்து பூஜை செய்ய உள்ளனர்.
இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாநில பொறுப்பாளர்கள் பக்தன்ஜி, முருகானந்தம், கார்த்திகேயன், கிருஷ்ணமூர்த்தி, மணலி மனோகர், இளங்கோவன் மற்றும் விழா கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
செப்டம்பர் 18-ந்தேதி தொடங்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை வெகு விமரிசையாக நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 17-ந்தேதி அன்று விழாக் குழுவினர் அனைவரும் காப்பு கட்டி விரதம் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட இடையூறுகள் விநாயகர் பெருமான் அருளால் நல்ல முறையில் தீர்ந்தன. எனவே இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக இந்து சமுதாய திருவிழாவாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் மைய கருத்து "அன்னைத் தமிழைக் காக்க, ஆன்மீகத்தை வளர்ப்போம்" என்பதாகும். இக்கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் இந்து முன்னணியினர் முடிவு செய்துள்ளனர்.
இதேபோன்று பாரத் இந்து முன்னணி அமைப்பின் ஆலோசனை கூட்டம் தலைவர் ஆர்.டி.பிரபு தலைமையில் நடைபெற்றது. சென்னை மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரம் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து சிறப்பான முறையில் பூஜைகள் செய்து 24-ந்தேதி கடலில் கரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மத்திய சென்னை மாவட்டம் சார்பில் வைக்கக்கூடிய விநாயகர் சிலைக்காக சென்னை புளியந்தோப்பு பட்டாளம் ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்கப்படுகிறது. வட சென்னை மாவட்டத்தில் வைக்கக்கூ டிய விநாயகர் சிலையும், ஆர்.கே.நகர் தொகுதியில் ஒன்று கூடி காசிமேடு கடற்கரையிலும், தென் சென்னை மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் திருவேற்காடு பகுதிகளில் வைக்கக்கூடிய விநாயகர் சிலைகள் நீலாங்கரை கடற்கரையிலும் கரைப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.