தமிழ்நாடு

கிழக்கு கடற்கரை சாலை சுங்கச்சாவடிகளில் 1-ந் தேதி முதல் கட்டணம் உயருகிறது

Published On 2023-03-30 05:48 GMT   |   Update On 2023-03-30 05:48 GMT
  • உள்ளூர் கார்கள் ஒரு சுங்கச்சாவடியை கடக்க மாத கட்டணம் ரூ.240 ஆகும்.
  • பள்ளிப் பேருந்துகளுக்கு மாத கட்டணம் ரூ.1900 ஆகும்.

சென்னை:

சென்னை-புதுச்சேரி நெடுஞ்சாலையில் உத்தண்டி, மாமல்லபுரம், அனுமந்தை உள்ளிட்ட பகுதிகளில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட சதவீதம் கட்டணம் உயர்த்தப்படும்.

சென்னை-மாமல்லபுரம் இடையே சுற்றுலா போக்குவரத்து அதிகரித்ததால் 2018-ம் ஆண்டு அக்கரை-மாமல்லபுரம் இடையேயான சாலை 4 வழிப்பாதையாக மேம்படுத்தப்பட்டது. மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே சாலை விரிவாக்கம் பணிகள் நடந்து வருகிறது.

இந்த பணிகள் காரணமாக மாமல்லபுரம், புதுச்சேரி இடையே கடந்த ஆகஸ்டு மாதம் முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படவில்லை. அனைத்து வாகனங்களுக்கும் அக்கரை-மாமல்லபுரம் வரையிலான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

தற்போது இந்த பகுதியில் சுங்க கட்டணம் வருகிற 1-ந் தேதி முதல் உயர்த்தப்படுகிறது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டி சுங்கச்சாவடி, திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கம் பகுதிகளில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் இணையும் சந்திப்பில் உள்ள கோவளம் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் இந்த கட்டண உயர்வு அமலில் இருக்கும்.

சென்னை அக்கரை-மாமல்லபுரம் இடையே கார், ஜீப், வேன் மற்றும் 3 சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.47, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.70, ஒரே நாளில் பலமுறை பயணம் செய்ய ரூ.128, மாதாந்திர கட்டணம் ரூ.2,721 ஆகும். இலகுரக சரக்கு வாகனங்கள், சிற்றுந்துகளுக்கு ஒரு முறை பயணம் செய்ய ரூ.75, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.113 கட்டணம் ஆகும்.

பேருந்து, இருசக்கர சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.157, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.236 கட்டணம் ஆகும். 3 சக்கர வர்த்தக வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.172, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.258 கட்டணம் ஆகும். 4 சக்கர, 6 சக்கர சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.247, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.370 கட்டணம். கடும் கனரக கட்டுமான வாகனங்கள், 7 மற்றும் கூடுதல் சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.301, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.451 கட்டணம் ஆகும்.

உள்ளூர் கார்கள் ஒரு சுங்கச்சாவடியை கடக்க மாத கட்டணம் ரூ.240 ஆகும். பள்ளிப் பேருந்துகளுக்கு மாத கட்டணம் ரூ.1900 ஆகும்.

Tags:    

Similar News