தமிழ்நாடு செய்திகள்

கிழக்கு கடற்கரை சாலை-பழைய மாமல்லபுரம் சாலை: 4 இடங்களில் சுங்க கட்டணம் ரத்து

Published On 2022-08-05 10:35 IST   |   Update On 2022-08-05 10:35:00 IST
  • தமிழகம்-புதுச்சேரி இடையேயான கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  • சென்னையில் இருந்து புதுச்சேரி செல்பவர்களுக்கு சுங்க கட்டணம் ரூ.140 முதல் ரூ.250 வரை மிச்சமாகும் என்றனர்.

தமிழகம்-புதுச்சேரி இடையேயான கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து அக்கரை முதல் மாமல்லபுரம் வரை 32 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த சாலை 4 வழிச்சாலையாக கடந்த 2018-ம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது.

அதேநேரத்தில் மாமல்லபுரம்-புதுச்சேரி இடையிலான சாலை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது. இந்த சாலையில் வெங்கம் பாக்கம் மற்றும் புதுச்சேரி எல்லையை ஒட்டியுள்ள அனுமந்தை ஆகிய இடங்களில் மாநில நெடுஞ்சாலை துறையின் கீழ் இயங்கும் தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனத்தால் சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டது.

இதேபோல் பழைய மாமல்லபுரம் சாலையில் பூஞ்சேரி மற்றும் சர்டாஸ் அருகே 2 இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது மாமல்லபுரம்-புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதற்காக 1,270 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளன. இந்த சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் மாநில நெடுஞ்சாலைத்துறை ஒப்படைத்துள்ளது. எனவே கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலையில் இந்த 4 இடங்களிலும் சுங்க கட்டணம் வசூல் செய்வது நேற்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'இந்த 4 சுங்கச் சாவடிகளிலும் தினமும் ரூ.8 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை வசூல் செய்யப்படும். கிழக்கு கடற்கரை சாலையில் தினமும்60 ஆயிரம் முதல்75 ஆயிரம் வரை வாகனங்கள் சென்று வருகின்றன.

சுங்க கட்டணம் ரத்து செய்யப்பட்டதன் மூலம் சென்னையில் இருந்து புதுச்சேரி செல்பவர்களுக்கு சுங்க கட்டணம் ரூ.140 முதல் ரூ.250 வரை மிச்சமாகும்' என்றனர்.

Similar News