இன்று உலக மீன்பிடி தினம்: பாரம்பரியத்தை மீறும் விதிமுறைகளால் பாழாய்போகும் மீனவர்கள் வாழ்வாதாரம்
- கரைவலை மூலம் நாள் ஒன்றுக்கு 1 டன் வரை மீன்பிடித்தவர்கள், தற்போது 200 கிலோ கிடைப்பதே அரிதாகி விட்டதாக அங்கலாய்க்கிறார்கள்.
- பாரம்பரிய மீன்பிடித்தலில் நாளுக்குநாள் பெருகிவரும் விதிமீறல்களால் வாழ்வாதாரம் பாதித்து மாற்றுத்தொழிலை தேடும் நிலை எப்போதே வந்துவிட்டது.
தமிழகம் நீண்ட கடற்கரையை கொண்டிருந்தபோதும், அதன் மூலம் தங்கள் வாழ்வை தேடும் மீனவர்களின் எதிர்காலம் மிகவும் குறுகியதாகவே இருக்கிறது. கடல் தாயை நம்பியுள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிய காலம் போய், அதிலிருந்து விடுபட நினைப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதற்கெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் வரும் உலக மீன்பிடி தின அறிவிப்பு வாழ்வை மாற்றும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே இன்றும் மேலோங்கி வருகிறது.
நவம்பர் 21-ந்தேதி உலக மீன்பிடி தினமாக கொண்டாடப்படுகிறது. பல்லுயிர் நலன் காக்க ஓருயிராய் கடலுக்கு செல்லும் மீனவரின் வாழ்வு காக்கப்படுகிறதா? என்பது இன்றளவும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. ஒருநாள் போவார், ஒருநாள் வருவார், ஒவ்வொரு நாளும் துயரம்... என்ற பாடல் வரிகள் மட்டுமே தற்போதைய மீனவர்களின் ஒரே அடையாளமாக திகழ்கிறது
இந்திய பொருளாதாரத்தில் அன்னியச்செலாவணியை அதிகம் பெற்றுத்தருவதில் மீன்பிடி தொழிலுக்கு பெரும் பங்கு இருந்தபோதிலும், அவர்களது பிரச்சனைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்காமல் இருப்பதுதான் வேதனைக்குரியது. இயற்கை சீற்றத்தால் ஏற்படும் இடர்பாடுகள், அண்டை நாட்டாரின் கெடுபிடிகள், உரிய பாதுகாப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் மீன்பிடித்தலை விட்டு வேறு ஏதாவது வேலைக்கு செல்லலாமா? என்ற நிலைக்கு கூட மீனவர்கள் வந்துவிட்டனர்.
அது ஒருபுறம் இருந்தாலும், மீன்பிடி முறையில் உள்ள பாரம்பரியங்கள் இன்று குழிதோண்டி புதைக்கப்பட்டதும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்க முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. கரைவலை என்று அழைக்கப்படும் பாரம்பரிய முறையிலான இழுவை மீன்பிடித்தல் என்பது பழமை வாய்ந்தது. சுமார் 40 முதல் 50 பேர் வரை கடலில் விரித்திருக்கும் வலை மூலம் கரையில் இருந்தவாறு மீன் பிடிக்கும் முறை. இவ்வாறு மீன்பிடிப்பதால் கடல் வளம் காக்கப்படுவதோடு, மீன்பாடு எப்போதும் குறையாது என்பதும் பரவலான கருத்து.
ஆனால் வளர்ந்து வரும் நாகரீம், தொழில்நுட்பம், பெருகும் விசைப்படகுகள் ஆகியவற்றால் இந்த கரைவலை மீன்பிடித்தல் காணாமல் போய்விட்டது. கரையில் இருந்து 3 கடல்மைல் தூரத்திற்கு அப்பால்தான் விசைப்படகுளை பயன்படுத்த வேண்டும் என்ற விதிகள் இருந்த போதிலும் அவை கடல் காற்றோடு சேர்ந்து பறந்து விட்டது. அத்துடன் ஒரு கடல்மைல் தூரம் வரை வீசப்படும் இந்த கரைவலை மீன்பிடித்தல் நசிந்துவிட்டதால் நாள் ஒன்றுக்கு மீனவர்கள் ரூ.15 ஆயிரம் வரை இழப்பையும் சந்திக்கிறார்கள்.
பாரம்பரிய இழுவை மீன்பிடி (உள்ளூரில் கரைவாலை என்று அழைக்கப்படுகிறது) என்பது ஒரு வகை மீன்பிடி ஆகும், அங்கு 40-50 பேர் கொண்ட குழு ஏற்கனவே கடலில் போடப்பட்ட வலையை கரையில் இருந்து மீன் பிடிக்க இழுக்கும். கடலில் இருந்து ஒரு கடல் மைல் தொலைவில் கடலில் வலை வைக்கப்படும். இந்த முறை முன்பு மிகவும் பிரபலமாக இருந்தது. இருப்பினும், இந்த வகை மீன்பிடியைச் சார்ந்து இருப்பவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தில் இருந்து கால்வாசி ஆகிவிட்டது.
கடலில் கலக்கப்படும் கழிவுநீர் கடல் நீரோட்டத்தை மாற்றுவதோடு, தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி இழுவை படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பது சற்றும் குறையவில்லை. படகுகளின் நீளம் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்ற நிலை மாறி, இன்று போர்க்கப்பல்களை போன்று கடலில் வலம் வரும் விசைப்படகுளை மீனவர்கள் பயன்படுத்துவதால் ஒட்டு மொத்த மீன்பாடும் அவர்களுக்கே சென்றுவிடுவதாகவும், பாரம்பரிய மீன்பிடி முறை பாதிக்கப்பட்டு விட்டதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
கரைவலை மூலம் நாள் ஒன்றுக்கு 1 டன் வரை மீன்பிடித்தவர்கள், தற்போது 200 கிலோ கிடைப்பதே அரிதாகி விட்டதாக அங்கலாய்க்கிறார்கள். பாரம்பரிய மீன்பிடித்தலில் நாளுக்குநாள் பெருகிவரும் விதிமீறல்களால் வாழ்வாதாரம் பாதித்து மாற்றுத்தொழிலை தேடும் நிலை எப்போதே வந்துவிட்டது. இனியும் இந்த நிலை ஏற்படாமல் தடுக்க கரையோர மீனவர்களின் நலனையும் அரசு கருத்தில் கொள்ளவேண்டும்.
உரிமைகளை விட்டுக்கொடுத்துவிட்டு, இன்று கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள், மத்திய, மாநில அரசுகள் நினைத்தால் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். ஆனால், அவர்கள் பிரச்சனைகளை கொண்டு அரசியல் செய்யத்தான் பார்க்கிறார்கள் என்று மீனவர்கள் தெளிவாக கூறுகின்றனர். அதேபோல் பாம்பன் குந்துகால், மூக்கையூர், தனுஷ்கோடி, செக்குவாடி உள்ளிட்ட பகுதிகளில் பல கோடி செலவில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தும் வராமல் இருக்கும் துறைமுகங்களால் மீனவர்கள் நலன் எந்தவிதத்திலும் காக்கப்படவில்லை.
இதுபோன்று கோடிகளை அள்ளிக்குவித்து நிறைவேற்றப்படும் அரசு திட்டங்களால் பயனடைவது மீனவர்களை பொறுத்தவரை 30 சதவீதம் பேர்தான். வெளிநபர்களே அதிகம் ஆதாயம் அடைவதாக ஆதங்கப்படும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் வருங்காலத்தில் உலக மீன்பிடி தினம் என்பது கடலில் கால் வைக்கும் ஒவ்வொரு மீனவரின் ஆத்மார்த்தமான மகிழ்ச்சி தினமாக அமைய அரசு நடவடிக்கை எடுக்குமா என்பது தான்.