பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்
- உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளையும் கவர்னர் ஆர்.என். ரவி சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.
- டெல்லியில் 3 நாட்கள் தங்கி இருக்கும் கவர்னர் ரவி வருகிற 30-ந்தேதி (வெள்ளி) சென்னை திரும்புகிறார்.
சென்னை:
தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் என்.ஐ.ஏ. நடத்திய சோதனையை தொடர்ந்து 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கோவை, சேலம், ஈரோடு, கன்னியாகுமரி உள்பட சில இடங்களில் பா.ஜனதா, இந்து முன்னணி அலுவலகங்கள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று டி.ஜி.பி.சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
மத்திய மந்திரி பானு பிரதாப் சிங் வர்மா கூறும் போது, 'இந்த சம்பவங்கள் தொடர்பாக தமிழக அரசிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று அவசரமாக டெல்லி செல்கிறார். இன்று மாலையில் டெல்லி செல்லும் கவர்னர் ரவி நாளை டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்கிறார். அப்போது தமிழகத்தில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக அறிக்கை வழங்குவார் என்று கூறப்படுகிறது.
மேலும் உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளையும் அவர் சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது. டெல்லியில் 3 நாட்கள் தங்கி இருக்கும் கவர்னர் ரவி வருகிற 30-ந்தேதி (வெள்ளி) சென்னை திரும்புகிறார்.
பரபரப்பான அரசியல் சூழலில் கவர்னரின் திடீர் டெல்லி பயணமும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.