தமிழ்நாடு

திருச்சுழியில் டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டி பணம் பறித்த சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது

Published On 2023-05-17 04:53 GMT   |   Update On 2023-05-17 04:54 GMT
  • கொள்ளையில் ஈடுபட்டவர்களின் உருவங்கள் பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.
  • போலீசார் கைது செய்து விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருச்சுழி:

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி குண்டாற்று காட்டு பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி ரம்ஜான் பண்டிகை விடுமுறை தினத்தையொட்டி மது வாங்குவதற்காக மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.

இதனை நோட்டமிட்ட மர்மகும்பல், டாஸ்மாக் விற்பனை நேரம் முடிந்து ஊழியர்கள் பணத்தை எண்ணிக்கொண்டிருந்த போது கடைக்குள் புகுந்து, வீச்சரிவாள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி ஊழியர்களிடமி ருந்து ரூ.6லட்சத்து 47ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

கொள்ளையர்கள் வெட்டியதில் காயமடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் 3பேர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

கொள்ளையர்களை அடையாளம் காண சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவை கைப்பற்றி, அதில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் கொள்ளையில் ஈடுபட்டவர்களின் உருவங்கள் பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா மேலாயூர் பகுதியை சேர்ந்த தர்ஷிக் சரண்(வயது 19) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் மற்ற கொள்ளையர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலில் பேரில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3-க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம் கீழக்கண்டனி பகுதியை சேர்ந்த ராஜபாண்டி என்பவர் தனிப்படை போலீசாரிடம் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News