தனது திருமணம் குறித்து மாற்றுத்திறனாளியோடு ஒப்பிட்டு பேசியதற்கு திருமாவளவன் வருத்தம் தெரிவித்தார்
- மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிற இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி.
- நான் ஒருபோதும் மாற்றுத்திறனாளிகளை காயப்படுத்தும் உள்நோக்கமோ, இளக்காரமாக மதிப்பீடோ கொண்டவனுமில்லை.
மேலவளவு முருகேசன் உள்ளிட்ட 7 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நினைவேந்தல் பொதுக்கூட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.
26-வது ஆண்டு நினைவு பொதுக்கூட்டம் கடந்த 30-ந்தேதி மேலவளவில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா. கைக்கூலிகள் பறையர் என்று சொல்லிக் கொண்டு வருவார்கள். சாதியின் பெயரை சொல்லி வரும் அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். தலித் சமுதாய பெயரை பயன்படுத்தி சனாதன அரசியல் செய்கிறார்கள். எனக்கு திருமணம் செய்துகொள்ள தெரியாதா, எதற்காக திருமணம் செய்து கொள்ளவில்லை. நான் நொண்டியா..., முடமா... என்று திருமாவளவன் பேசினார்.
அவ்வாறு பேசிய அவர் உடனே அப்படி சொல்லக் கூடாது அந்த வார்த்தையை பயன்படுத்தக்கூடாது எனவும் வருத்தம் தெரிவித்தார்.
இதுபற்றி சமூகவலை தளங்களில் சர்ச்சை கருத்துக்கள் எழுப்பப்பட்டதை அடுத்து திருமாவளவன் டுவிட்டரில் மாற்றுத்திறனாளி குறித்து கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலவளவு போராளிகள் வீர வணக்க நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றும் போது மாற்றுத்திறனாளிகள் மனம் நோகும் வகையில் ஓரிரு சொற்கள் தவறி விழுந்து விட்டன. அப்போதே அதற்கு வருத்தம் தெரிவித்தேன்.
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிற இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி. நான் ஒருபோதும் மாற்றுத்திறனாளிகளை காயப்படுத்தும் உள்நோக்கமோ, இளக்காரமாக மதிப்பீடோ கொண்டவனுமில்லை.
என்னைப்பற்றி தனிப்பட்ட முறையில் அவதூறு பரப்பும் ஒரு சில அற்பர்களை கண்டிக்கும் வகையில் நான் ஆதங்கப்பட்டு எனது உரையின் போக்கிலேயே தன்னிலை விளக்கம் அளித்தேன். அச்சொற்கள் என்னையும் அறியாமல் தவறுதலாக 'நா தவறி வந்து விழுந்தன' இனி அவ்வாறு நிகழா வண்ணம் பார்த்துக் கொள்கிறேன். வருந்துகிறேன். மாற்றுத்திறனாளிகள் தோழர்கள். பொறுத்தருளவும்.