தமிழ்நாடு

மாநகராட்சி ரிப்பன் கட்டிட கோபுரத்தில் உள்ள 109 ஆண்டுகள் பழமையான கடிகாரம் பழுதுபார்க்கப்படுகிறது

Published On 2022-07-01 05:36 GMT   |   Update On 2022-07-01 06:16 GMT
  • ரிப்பன் கட்டிடத்தின் கோபுரத்தில் உள்ள இந்த கடிகாரம் இன்று முதல் 25 நாட்களுக்கு இயங்காது.
  • லண்டனில் தயாரிக்கப்பட்ட இந்த கடிகாரம் தொடர்பான பெரும்பாலான தகவல்கள் தொலைந்துவிட்டன.

சென்னை:

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தின் கோபுரத்தில் கடிகாரம் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கடிகாரம் 1913-ம் ஆண்டு லண்டனில் தயாரிக்கப்பட்டது. இது 109 ஆண்டுகள் பழமையான கடிகாரம் ஆகும்.

இந்த கடிகாரத்தின் சில பாகங்கள் பழுதடைந்து இருப்பதாக தொழில்நுட்ப பணியாளர்கள் கண்டுபிடித்தனர். எனவே இந்த கடிகாரம் தொடர்ந்து தடையின்றி செயல்படுவதற்கு ஏதுவாக அதில் பராமரிப்பு பணிகள் மற்றும் பழுதுகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற உள்ளது.

எனவே ரிப்பன் கட்டிடத்தின் கோபுரத்தில் உள்ள இந்த கடிகாரம் இன்றுமுதல் 25 நாட்களுக்கு இயங்காது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

லண்டனில் தயாரிக்கப்பட்ட இந்த கடிகாரம் தொடர்பான பெரும்பாலான தகவல்கள் தொலைந்துவிட்டன. எனவே பழுதடைந்த உதிரி பாகங்களை உள்ளூரில் இருந்தே பெற்று மாற்றுவதற்கு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.இதன் உதிரி பாகங்களை போன்ற மாற்று பாகங்களை தயாரிப்பதற்காக அம்பத்தூரில் உள்ள லேத் பட்டறைக்கு இதன் பாகங்கள் அனுப்பி வைக்கப்படும்.

ஜவஹர்லால் நேரு நகர்ப் புற புதுப்பித்தல் இயக்ககத்தின் நிதி மூலம் கடந்த 2013-ம் ஆண்டு இந்த பாரம்பரிய கட்டிடத்தை மறு சீரமைக்கும்போது மணிக் கூண்டு கோபுரத்தின் சில பகுதிகள் சரிசெய்யப்பட்டன. இந்த கடிகாரத்தில் சரியான நேரத்தை காட்டுவதற்கான முள்களை இயக்கும் தண்டு தேய்ந்து விட்டது. அந்த தண்டும் மாற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News