31 மணிநேரம் உணவு, தண்ணீர் அருந்தாமல் ரெயில் கழிவறையில் பயணம் செய்த வாலிபருக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிக்சை
- டிக்கெட் பரிசோதகர் அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படைக்கும், ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
- போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் சோகன் தாஸ் என்று கூறினார்.
அரக்கோணம்:
ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் 20-ந் தேதி காலை புறப்பட்டு எர்ணாகுளம் நோக்கி வந்து கொண்டிருந்தது.
இந்த எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஸ்-2 பெட்டியின் கழிவறை ரெயில் புறப்பட்டதில் இருந்து பூட்டிய நிலையிலேயே இருந்துள்ளது. ஆனால் கழிவறையின் உள்ளே ஆள் இருக்கும் சத்தம் மட்டும் கேட்டது.
இதற்கிடையே ரெயில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை கடந்து அரக்கோணம் வந்து கொண்டிருந்த போது மீண்டும் கழிவறையில் இருந்து சத்தம் வந்தது. பயணிகள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட ரெயில் பெட்டியில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து டிக்கெட் பரிசோதகர் அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படைக்கும், ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்தை வந்தடைந்ததும் போலீசார் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் சென்று அந்த கழிவறை கதவை உடைத்து திறந்தனர். அதில் வாலிபர் ஒருவர் பதுங்கி இருந்தார்.
அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் சோகன் தாஸ் என்று கூறினார்.
சுமார் 31 மணி நேரம் வாலிபர் உணவு, தண்ணீர் அருந்தாமல் கழிவறையில் பயணம் செய்து உள்ளார்.
மேலும் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று முன்னுக்கு பின் முரணாக பேசியதால் முழுமையான விவரம் தெரியவில்லை. அவரை பாதுகாப்புப் படை போலீசார் அரக்கோணம் ரெயில்வே மருத்துவமனையில் சேர்த்தனர்.
வாலிபர் மனநிலை பாதிக்கபட்டவர் என்பது தெரியவந்தது. இன்று அதிகாலை வாலிபரை சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு வாலிபருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.