தமிழ்நாடு

போரூர்-ஆழ்வார்திருநகர்-வடபழனி உள்பட 500 இடங்களில் டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படுகிறது

Published On 2023-04-26 11:19 GMT   |   Update On 2023-04-26 11:19 GMT
  • தமிழகத்தில் பள்ளி- கல்லூரிகள், கோவில்கள் அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.
  • டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

சென்னை:

தமிழகத்தில் பள்ளி- கல்லூரிகள், கோவில்கள் அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.

அதே நேரத்தில் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.

இதன் படி சட்டசபையில் கூட்டம் நடைபெற்றபோது அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் 500 மதுபான சில்லரை விற்பனை கடைகள் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கோவில்களின் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது.

50 மீட்டர் இடைவெளியில் செயல்படும் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட வேண்டிய கடைகளின் பட்டியலில் உள்ளது. அது போன்று குறைந்த இடைவெளியில் உள்ள கடைகளும் மூடப்பட உள்ளன.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் பள்ளிகள் மற்றும் கோவில்களின் எதிரில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி டாஸ்மாக் நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் சென்றுள்ளன.

இதையடுத்து அது போன்ற கடைகளும் மூடப்படவேண்டிய டாஸ்மாக் கடைகளின் பட்டியலில் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் போரூர் டோல்கேட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை (எண்.9170), பள்ளிக்கூடம் அருகில் செயல்பட்டு வருவதாக புகார்கள் கூறப்பட்டு வந்தன. இதேபோன்று போரூரில் இருந்து குன்றத்தூர் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையும் (எண்9043) பள்ளி எதிரில் உள்ளது.

இந்த 2 கடைகளும் மூடப்பட வேண்டிய டாஸ்மாக் கடைகளின் பட்டியலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வடபழனி ஏ.வி.எம். ஸ்டூடியோ பகுதியில் பெருமாள் கோவில் எதிரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை (எண்506), விருகம்பாக்கம், ஆழ்வார் திருநகர் பகுதியில் பள்ளி எதிரில் உள்ள டாஸ்மாக் கடை (எண்8870) மற்றும் செங்குன்றம், அலமாதி ஆட்டந்தாங்கல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஆகியவையும் மூடப்பட வேண்டிய கடைகளின் வரிசையில் இருப்பதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேபோன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பள்ளி, கோவில்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நடவடிக்கைகள் இன்னும் சில தினங்களில் நிறைவுபெற்று பிரச்சினைக் குரிய கடைகள் மூடப்படும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News