நீலகிரியில் கடும் குளிர்-பனிமூட்டம்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- மழை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக ஊட்டியில் கடுங்குளிர் நிலவியது.
- தொழிலாளர்கள் மழையில் நனையாமல் இருக்க பிளாஸ்டிக் போர்வை அணிந்து விவசாய பணிகளில் ஈடுபட்டனர்.
ஊட்டி:
மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிக முதல் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்திலும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு நேற்று அதிகாலை முதலே கடும் பனிமூட்டமும், குளிரும் நிலவியது. நாள் முழுவதும் லேசான சாரல் மழையும் பெய்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 9 டிகிரி செல்சியஸ் காலநிலையும் பதிவானது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு 73 சதவீதமாக இருந்தது.
மழை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக ஊட்டியில் கடுங்குளிர் நிலவியது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கினர். தொழிலாளர்கள் மழையில் நனையாமல் இருக்க பிளாஸ்டிக் போர்வை அணிந்து விவசாய பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும் காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் குளிரை போக்க கம்பளி ஆடைகள் அணிந்தும், மழையில் நனையாமல் இருக்க குடைகள் பிடித்தபடியும் சென்றனர்.
ஊட்டி, குன்னூரில் கடும் பனிமூட்டம் காணப்பட்டதால் சாலையில் முன்னால் சென்ற வாகனங்கள் தெரியவில்லை.
இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். இதேபோல் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி ஊட்டி படகு இல்லத்தில் மிதிபடகு, துடுப்பு படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
கோத்தகிரி பகுதியில் நேற்று காலை முதலே சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கடுங்குளிர் நிலவியது. பள்ளி சென்று திரும்பிய மாணவர்கள் மழையில் நனைந்தவாறு சென்றனர். கடுங்குளிரில் இருந்து தப்பிக்க ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். கடுங்குளிர் மற்றும் பனிமூட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.