தமிழ்நாடு செய்திகள்

பள்ளி வாகனத்தில் ஏற்பட்ட கரும்புகையை அணைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.

திண்டுக்கல்லில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி வேனில் தீ விபத்து- 20 பேர் உயிர் தப்பினர்

Published On 2023-06-20 10:59 IST   |   Update On 2023-06-20 10:59:00 IST
  • வாகனங்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதா? என தெரியவில்லை.
  • மாவட்டம் முழுவதும் பள்ளி வாகனங்களின் தரத்தை உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் தோமையார்புரம் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை அழைத்து வர ஏராளமான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்று காலையில் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மாணவர்களை ஏற்றிக் கொண்டு டிரைவர் பள்ளி நோக்கி வந்து கொண்டு இருந்தார். திண்டுக்கல்-மதுரை சாலையில் பள்ளி வேன் வந்தபோது வேனின் பின்புறம் தீ விபத்து ஏற்பட்டு பேட்டரியில் இருந்து கரும்புகை வெளியேறியது.

இதைப் பார்த்ததும் பின்னால் வந்த வாகன ஓட்டிகள் பள்ளி வேன் டிரைவரிடம் இது குறித்து தெரிவித்தனர். உடனடியாக பள்ளி வேனை நிறுத்திய டிரைவர் மாணவர்கள் அனைவரையும் கீழே இறக்கினார்.

அதன் பிறகு அப்பகுதி பொதுமக்கள் வேன் மீது தண்ணீரை ஊற்றி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் திண்டுக்கல்-மதுரை சாலையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே வேனில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் தனியார் பள்ளி வாகனங்கள் அனைத்தும் அரசு வழிகாட்டுதலின்படி முறையாக உள்ளதா? என மாவட்ட கலெக்டர், எஸ்.பி., வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பல வாகனங்கள் தரமற்ற முறையில் இருந்தது கண்டறியப்பட்டு அவற்றை மீண்டும் சரி செய்ய நோட்டீஸ் அனுப்பினர்.

ஆனால் அந்த வாகனங்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதா? என தெரியவில்லை. எனவே மாவட்டம் முழுவதும் பள்ளி வாகனங்களின் தரத்தை உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News