தரைப்பாலம் வழியாக செல்லும் மாணவ-மாணவிகள்
தரைப்பாலத்தில் ஓடும் மழை வெள்ளத்தில் நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள்
- மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.
- மழை வெள்ளத்தில் ராமச்சந்திராபுரம் பகுதியில் இருந்து குன்னூர் செல்லும் தரைப்பாலம் மூழ்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.
நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில், மல்லி, வன்னியம்பட்டி, அழகாபுரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
இந்த மழை வெள்ளத்தில் ராமச்சந்திராபுரம் பகுதியில் இருந்து குன்னூர் செல்லும் தரைப்பாலம் மூழ்கியது. தொடர்ந்து தரைப்பாலத்தில் அதிக அளவு தண்ணீர் செல்லும் நிலையில் பள்ளி மாணவ-மாணவிகள் ஆபத்தை உணராமல் அந்த வழியாக சென்று வருகின்றனர்
இந்த பாலம் சேதமாக உள்ளதால் அதனை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக வற்புறுத்தி வருகின்றனர்.
இந்த தரைப்பாலத்தில் செல்லும் மாணவ-மாணவிகள் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக சென்றுவர அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென்று கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்தது.
இதைத்தொடர்ந்து சாத்தூர் தாலுகா அலுவலகம் அருகில் செயல்படும் பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் மழை நீர் புகுந்தது. அங்கு அதிக அளவு மழைநீர் தேங்கியதால் மேஜை, நாற்காலி மழை வெள்ளத்தில் மிதந்தது. கழிவு நீரும் சேர்ந்து வந்ததால் துர்நாற்றம் வீசியது.
பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவாளர் அறை, பத்திரம் சேமிப்பு அறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழை நீர் புகுந்தது. மேலும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியில் இருந்த பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டு மழை நீரை வெளியேற்றியதால் பத்திரங்கள் அனைத்தும் மீட்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.