சத்தியமங்கலம் அருகே சீரான குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்
- கடந்த ஒரு மாதமாக குடிநீர் குழாயில் சீரான தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது.
- குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள சதுமுகை ஊராட்சிக்கு உட்பட்ட ஆலத்துகோம்பை பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி சார்பில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் குழாயில் சீரான தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் சதுமுகை ஊராட்சி அலுவலகத்தில் சென்று புகார் அளித்தனர்.
ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் முதியவர்கள், குழந்தைகளை வைத்துள்ளவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் ஆலத்து கோம்பை பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் மற்றும் சதுமுகை ஊராட்சி மன்ற தலைவி சத்யாவின் கணவர் சிவராஜ் மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சிவராஜை சூழ்ந்து கொண்டு அப்பகுதி மக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் இன்று மாலைக்குள் சீரான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர்.