மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்.
மின்சாரம் தாக்கி பலியான கல்லூரி மாணவர் உடலை வாங்க மறுத்து 4-வது நாளாக உறவினர்கள் போராட்டம்
- லேத் பட்டறை உரிமையாளர் ராஜ்குமார் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம்.
- போராட்டம் இன்று 4-வது நாளாகவும் நீடிக்கிறது. இதனால் சிவகிரி பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கந்தசாமிபாளையத்தை சேர்ந்தவர் ரவி. தூய்மை பணியாளர். இவரது மகன் ஹரிசங்கர் (17). கல்லூரி மாணவரான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தன்று அருகில் உள்ள ராஜ்குமார் என்பவரது லேத் பட்டறைக்கு வேலைக்கு சென்றார்.
அப்போது மின்சாரம் தாக்கி மாணவர் ஹரிசங்கர் பலியானார். இதையடுத்து சிவகிரி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் லேத் பட்டறை உரிமையாளர் ராஜ்குமார் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யும் வரை மாணவர் உடலை வாங்கமாட்டோம் என்று கூறி உறவினர்கள் கடந்த 3 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று இரவு உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது ஆர்.டி.ஓ. சதீஸ்குமார், உதவி போலீஸ் சூப்பிரணடு கவுதம் கோயல், ஏ.டி.எஸ்.பி. பாலமுருகன், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் துணை கண்காணிப்பாளர் நீலகண்டன், தாசில்தார் மாசிலாமணி, இன்ஸ்பெக்டர் ஆனந்த் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் போராட்டம் தொடர்ந்து நடந்தது.
இந்நிலையில் போராட்டம் இன்று 4-வது நாளாகவும் நீடிக்கிறது. இதனால் சிவகிரி பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.