தமிழ்நாடு செய்திகள்

ராஜபாளையத்தில் தொழில் அதிபர் வீட்டில் 50 பவுன் நகைகள்- ரூ. 1 ¼ கோடி பத்திரங்கள் கொள்ளை

Published On 2022-10-18 11:13 IST   |   Update On 2022-10-18 11:13:00 IST
  • பாலகுமரன் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
  • தொழில் அதிபர் வீட்டில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆவாரம்பட்டி கம்பர் தெருவைச் சேர்ந்தவர் பாலகுமரன் (வயது 29). விசைத்தறி கூடம் மற்றும் பல்வேறு தொழில்களை செய்து வரும் இவர் தனது தாயுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டின் பீரோவை பாலமுருகன் எதேச்சையாக திறந்து பார்த்தார். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை மாயமாகி இருந்தது.

இதே போல் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் நிறுவனத்தில் ரூ. 1 கோடியே 29 லட்சம் முதலீடு செய்ததற்கான பத்திரங்கள், சத்திரப்பட்டியில் உள்ள விசைத்தறிக்கூட பத்திரம், வீட்டு பத்திரங்கள், ஏ.டி.எம். கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் திருடு போயிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பாலகுமரன் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். மேலும் இது தொடர்பாக விசாரித்து குற்றவாளிகளை கைது செய்து நகை-பணம், ஆவணங்களை மீட்டுத்தர போலீசாருக்கு உத்தரவிடுமாறு பாலகுமரன் ராஜபாளையம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு நகை-பணம், ஆவணங்கள் கொள்ளை போனது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பாலகுமரன் வீட்டில் துணிகர கொள்ளையில் ஈடுபட்டது யார்? என போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மேலும் கொள்ளை நடந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். தொழில் அதிபர் வீட்டில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News