தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் 800 இடங்களில் 4-வது நாளாக வெள்ளம் சூழ்ந்துள்ளது: படகுகள் மூலம் மீட்கும் பணி தொடர்கிறது

Published On 2023-12-07 11:10 IST   |   Update On 2023-12-07 11:10:00 IST
  • புயல், மழை பாதிப்புக்கு இதுவரை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 22 பேர் பலியாகி உள்ளனர்.
  • மழையால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் 372 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை:

சென்னையில் மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளும், நிவாரண பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதியில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய சென்னை பகுதியில் இயல்பு நிலை திரும்பி விட்ட நிலையில் தென் சென்னையிலும், வட சென்னையிலும் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாதவரம், மணலி, எண்ணூர், கொரட்டூர், தாம்பரம், வேளச்சேரி, பீர்க்கங்கரணை, பெரும்பாக்கம், மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இன்னமும் பல்லாயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து அபாயகரமான அளவில் நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் இருப்பவர்களை படகுகளின் மூலம் மீட்கும் பணி இன்று 3-வது நாளாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை 4,500 பேர் நேற்றும், இன்றும் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். அடுக்குமாடிகளில் யாராவது சிக்கி தவிக்கிறார்களா என்பதை டிரோன்கள் மூலம் ஆய்வு செய்யும் பணி நேற்றும், இன்றும் நடந்தது. டிரோன்கள் மூலம் அதிக பாதிப்பு பகுதிகள் கண்டறியப்பட்டு மீட்பு படையினர் அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

தென்சென்னை பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கில் இருந்து வெளிவர முடியாமல் சிக்கி தவிக்கும் மக்களுக்கு நேற்று ஹெலிகாப்டர் மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இன்றும் 2-வது நாளாக விமானப் படை வீரர்கள் ஹெலிகாப்டர்களில் சென்று உணவு பொட்டலங்களை வழங்கினார்கள்.

புயல், மழை பாதிப்புக்கு இதுவரை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 22 பேர் பலியாகி உள்ளனர். தண்ணீரை முழுமையாக அகற்றிய பிறகு பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.

மழையால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் 372 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி சுமார் 42 ஆயிரம் பேர் முகாம்களில் உள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

நேற்று மாலை வரை வடசென்னை, தென் சென்னை பகுதிகளில் 866 இடங்களில் மழை தண்ணீர் தேங்கி இருந்தது. நேற்று இரவு ராட்சத எந்திரங்கள் மூலம் சுமார் 60 இடங்களில் தண்ணீர் முழுமையாக அகற்றப்பட்டது. அங்கு நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டன.

இன்று காலை நிலவரப்படி இன்னமும் 800 இடங்களில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அவற்றை அகற்றும் பணியும் நடந்து வருகிறது. இந்த இடங்களில் இருந்து இதுவரை சுமார் 20 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மீட்பு பணி மற்றும் நிவாரண பணிகளில் அனைத்து துறைகளையும் சேர்ந்த சுமார் 1 லட்சம் பேர் ஈடுபட்டு உள்ளனர். சென்னையில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளனர். வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருப்பவர்களும் நிவாரண பணிகளை செய்து வருகிறார்கள்.

சென்னையில் குப்பைகளை அகற்றும் பணியில் சுமார் 25 ஆயிரம் துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

மிச்சாங் புயல் மழைக்கு சுமார் 400 இடங்களில் மரங்கள் விழுந்தன. அவற்றில் நேற்று இரவு வரை சுமார் 350 இடங்களில் மரங்கள் அகற்றப்பட்டு விட்டன. 50 மரங்கள் இன்று அகற்றப்பட்டு வருகின்றன. இந்த பணி இன்று அல்லது நாளை நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் உள்ள 2 சுரங்கப்பாதைகளில் 16 பாதைகளில் போக்குவரத்து தொடங்கி விட்டது. இன்னும் 6 சுரங்க பாதைகள் மட்டும் சீரமைக்கப்பட வேண்டி உள்ளது.

சென்னையில் பஸ் போக்குவரத்து 90 சதவீதம் சீரடைந்து விட்டது. 488 பஸ் வழித்தடங்களில் 56 வழித் தடங்களில் மட்டும் இன்னமும் தண்ணீர் தேங்கி உள்ளது. நாளைக்குள் அந்த வழித்தடங்களும் சீராகும் என்று தெரிகிறது.

அதுபோல மின்சாரமும் தொடர்ந்து சீரமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் 97 சதவீத இடங்களில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டு விட்டதாக மின் வாரியம் தெரிவித்து உள்ளது. இன்று இரவுக்குள் முழுமையாக அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் கொடுக்கப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் தினமும் சராசரியாக 19 லட்சம் லிட்டர் பால் வினியோகம் செய்யப்படும். நேற்று 14 லட்சம் லிட்டர் பால்தான் வினியோகம் செய்யப்பட்டது. 5 லட்சம் லிட்டர் பால் குறைந்ததால் கடைகளில் பால் கிடைக்காத நிலை ஏற்பட்டது.

இன்றும் 19 லட்சம் லிட்டர் பால் வழங்கப்படவில்லை. இதனால் இன்றும் பல பகுதிகளில் கடைகளில் பால் கிடைக்கவில்லை. தனியார் நிறுவன பால்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன.

முகவர்கள் மூலம் வீடுகளுக்கு வழங்கப்படும் ஆவின் பால் வினியோகம் இன்று சீரடைந்தது. நாளைக்குள் பால் வினியோகம் முழுமையாக சீரடைந்து விடும் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னையில் சுமார் 900 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. பல இடங்களில் பெட்ரோல், டீசல் லாரிகள் வராததால் பங்க்குகள் மூடும் நிலை ஏற்பட்டது. இன்று காலை நிலவரப்படி 850 பெட்ரோல் பங்க்குகள் வழக்கம் போல் இயங்கின.

புயல், மழை காரணமாக தொலை தொடர்பு சென்னையில் கடுமையாக துண்டிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை 90 சதவீதம் தொலைத்தொடர்பு சீரமைக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பல பகுதிகளில் மழைநீர் வடிந்து வந்தாலும் இன்னும் 3500 தெருக்களில் தண்ணீர் வடியாமல் தேங்கி கிடக்கிறது.

குறிப்பாக பெரம்பூர், ஜமாலியாவை சுற்றி உள்ள பகுதிகள், ராயபுரம், வியாசர்பாடியை சுற்றி உள்ள பகுதிகள் பட்டாளம், புளியந்தோப்பு அங்காளம்மன் கோவில் தெரு, மணலி சடையாங்குப்பம், கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகள், பாடி, அயப்பாக்கம் கொளத்தூரில் சில பகுதிகள், மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை வியாசர்பாடி சுரங்கப்பாதை, கணேசபுரம், ஸ்டான்லி நகர், ரங்கராஜபுரம், சுரங்கப் பாதை உள்ளிட்ட பகுதிகளிலும் தண்ணீர் இன்னும் வடியாமல் உள்ளது.

இது தவிர சிட்கோ நகர், அம்பத்தூர் மேனாம்பேடு, கருக்கு பகுதிகளிலும் மழை நீர் வடியவில்லை. மிக அதிக அளவு தண்ணீர் நிறைந்த பகுதிகளாக பள்ளிக்கரணை, பெருங்குடி பெரும்பாக்கம், அனகாபுத்தூர், வேளச்சேரி, முடிச்சூர், சேலையூர், சோழிங்கநல்லூர், நாவலூர், திருவேற்காடு, ராஜாங்குப்பம், நசரத்பேட்டை, மாங்காடு, ஓம் சக்தி நகர் பகுதிகளில் வெள்ளநீர் இன்னும் வடியாமல் தத்தளித்த வண்ணம் உள்ளது.

இங்குள்ள மக்கள் உணவின்றி தவியாய் தவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News