பங்கு சந்தையில் நஷ்டம்: தனியார் நிதி நிறுவன அதிகாரி தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை
- பங்கு சந்தையில் பெருமளவில் பணத்தை முதலீடு செய்ததால் ஜெகதீஷ் கடன் கொடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிபட்டார்.
- வீட்டில் இருந்த 50-க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்தார்.
மதுரை:
அவனியாபுரம் பிரசன்னா காலனியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். (வயது 39). இவர் மனைவி மணிமாலாவுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். கோவையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஜெகதீஷ் மேலாளராக வேலை பார்த்தார்.
அப்போது அவருக்கு பங்கு சந்தை முதலீடு பற்றி தெரியவந்தது. அதில் பணத்தை முதலீடு செய்தால் லட்சக்கணக்கில் லாபம் கிடைக்கும் என்று நண்பர்கள் தெரிவித்தனர். எனவே அவர் பங்கு சந்தையில் பணத்தை முதலீடு செய்தார். இதில் அவருக்கு தொடக்கத்தில் ஓரளவு லாபம் வந்தது. இதையடுத்து ஜெகதீஷ் அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி அந்த பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்தார்.
இந்த நிலையில் பங்கு சந்தையில் திடீரென சரிவு ஏற்பட்டது. ஜெகதீஷ் வாங்கிய பங்குகளின் விலை மிகவும் குறைந்தது. இதையடுத்து ஜெகதீசனுக்கு கடன் கொடுத்தவர்கள், பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்தனர்.
ஏற்கனவே பங்கு சந்தையில் பெருமளவில் பணத்தை முதலீடு செய்ததால் ஜெகதீஷ் கடன் கொடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிபட்டார். மேலும் கடன் கொடுத்தவர்கள் ஜெகதீஷ் வீட்டிற்கு அடிக்கடி சென்று பணம் கேட்டு தொல்லை கொடுத்தனர்.
இதனால் வாழக்கையில் விரக்தியடைந்த ஜெகதீஷ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் இருந்த 50-க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகதீஷ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.