தமிழ்நாடு

குப்பை தொட்டியில் வீசப்பட்ட பெண் குழந்தை மீட்பு

Published On 2024-02-16 07:26 GMT   |   Update On 2024-02-16 12:06 GMT
  • குழந்தையின் உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
  • பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

பூந்தமல்லி:

பூந்தமல்லி, ராமானுஜ கூடத் தெருவில் தனியாருக்கு சொந்தமான பெண்கள் விடுதி உள்ளது. நேற்று இரவு அதன் அருகில் உள்ள குப்பை தொட்டியில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் யுவராணி என்பவர் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை உயிருடன் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து யுவராணி உடனடியாக அந்த பகுதி மக்களின் உதவியுடன் குப்பை தொட்டியில் எறும்புகள் மொய்த்த நிலையில் பிறந்து சில நாட்களே ஆகி இருந்த பெண் குழந்தையை மீட்டார். பின்னர் குழந்தையை பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தையின் உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.


இதுபற்றி அறிந்ததும் பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். குழந்தையின் தாய் யார்? குழந்தையை வீசி சென்றது ஏன்? கடத்திவரப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மர்ம நபர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த குழந்தையை குப்பை தொட்டிக்குள் வீசி சென்று இருப்பதும் குழந்தை அழுத படியே சோர்ந்து உயிருக்கு போராடியபடி கிடந்து இருப்பதும் தெரிந்தது. இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News