தமிழ்நாடு

பணத்துக்காக மோசடி: ஏற்கனவே திருமணமான பெண்ணை வாலிபருக்கு திருமணம் செய்து வைத்த புரோக்கர்

Published On 2024-02-23 10:31 GMT   |   Update On 2024-02-23 10:31 GMT
  • திருமணம் செய்து வைப்பதாக கூறி ஏமாற்றி ரூ.3.50 லட்சம் பணத்தை பெற்ற பெண் புரோக்கர் தனலட்சுமி மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என புகார் மனு.
  • புகாரின் பேரில் போலீசார் பெண் புரோக்கர் தனலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை:

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூரை சேர்ந்தவர் தணிகாசலம் (வயது 43). பிட்டர். இவர் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

நான் தனியார் நிறுவனத்தில் பிட்டராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு ஒரு அண்ணன் மற்றும் தம்பி ஆகியோர் உள்ளனர். எனக்கு 43 வயதாகியும் திருமணம் ஆகவில்லை. இந்தநிலையில் எனக்கு தங்கை முறையான திருப்பூரை சேர்ந்த உமா மகேஸ்வரி என்பவர் மூலம் மதுரையை சேர்ந்த திருமண புரோக்கர் தனலட்சுமி என்பவர் அறிமுகமானார்.

அவரிடம் எனக்கு திருமணம் செய்வதற்கு பெண் பார்க்கும்படி கூறினேன். அதற்கு அவர் பெண் ஒருவர் இருப்பதாகவும், புரோக்கர் கமிஷனாக ரூ.3.50 லட்சம் பணம் தர வேண்டும் என்றார். இதனை உண்மை என நம்பிய நான் ரூ.3.50 லட்சம் பணத்தை புரோக்கர் தனலட்சுமியிடம் கொடுத்தேன்.

கடந்த 21-ந்தேதி எனக்கும், 30 வயது பெண் ஒருவருக்கும் திருப்பூர் அவினாசி நகர் கோவிலில் வைத்து திருமணம் நடந்தது. பின்னர் நான் மணப்பெண்ணுடன் வீட்டிற்கு சென்றேன். நேற்று மதியம் கோவிலுக்கு செல்வதற்காக புறப்பட்டு கொண்டு இருந்தேன். அப்போது நான் திருமணம் செய்த பெண், என்னிடம் வந்து அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதாக தெரிவித்தார்.

மேலும் பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த போது அங்கு வந்த புரோக்கர் தனலட்சுமி ரூ.20 ஆயிரம் பணம் தருவதாக கூறி திருமணம் செய்து வைத்ததாக கூறினார். இதனை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.

எனவே எனக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி ஏமாற்றி ரூ.3.50 லட்சம் பணத்தை பெற்ற பெண் புரோக்கர் தனலட்சுமி மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

புகாரின் பேரில் போலீசார் பெண் புரோக்கர் தனலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News