குலசேகரன்பட்டினத்தில் அமையும் ராக்கெட் ஏவுதளம் அருகே விண்வெளி தொழில் பூங்காக்கள் அமைக்க திட்டம்- அமைச்சர் தகவல்
- விண்வெளி துறையில் இந்தியா பல்வேறு வியத்தகு சாதனைகளை படைத்து வருகிறது.
- தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
சென்னை:
விண்வெளி துறையில் இந்தியா பல்வேறு வியத்தகு சாதனைகளை படைத்து வருகிறது.
தற்போது பல்வேறு ஆராய்ச்சிகளுக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) மூலம் ஏவப்படும் செயற்கைகோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டு வருகிறது.
இந்நிலையில் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு மற்றொரு ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதற்காக 2,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளது. தொடர்ந்து அந்த நிலங்களை சுற்றி கம்பி வேலிகள் அமைக்கும் பணி உள்ளிட்ட ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சமீபத்தில் குலசேகரன்பட்டினத்தில் ஆய்வு செய்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என தெரிவித்தார்.
இதற்கிடையே குலசேகரன்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளம் அருகே விண்வெளி தொழில் பூங்காக்களை அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் லிமிடெட் (டிட்கோ), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி உள்ளார்.
இங்கு அமையும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி. என்ற சிறிய ரக ராக்கெட்டுகளை விண்ணில் அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ராக்கெட் உருவாக்குவதற்கான பொருட்களை வெகு தொலைவில் இருந்து இங்கு எடுத்து வர கூடுதல் செலவுகள் ஆகும்.
எனவே ராக்கெட் உருவாக்குவதற்கு தேவையான பொருட்களை குலசேகரன்பட்டினம் அருகே விண்வெளி தொழில் பூங்காக்களை அமைத்து அங்கு பொருட்களை தயாரித்து வழங்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-
குலசேகரன் பட்டினத்தில் விண்வெளி தொழில் பூங்காக்கள் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம், இஸ்ரோவுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
ராக்கெட் உருவாக்க பொருட்களை கொண்டு வருவதன் மூலம் இந்த தளத்தின் செயல்திறன் மேம்படும். பிரத்யேக விண்வெளி தொழில் பூங்காக்களை நிறுவுவதன் மூலம் இஸ்ரோ அதன் சப்ளையர்களை அருகாமையில் வைத்திருக்க உதவுவோம்.
இந்த திட்டம் தென் மாவட்டங்களின் பொருளாதாரத்தை மாற்றி அமைக்கும். ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைகோள் தயாரிப்பு, அவற்றை உருவாக்குவதற்கான உதிரிபாகங்களை உருவாக்குதல் போன்ற பல தொழில்கள் உள்ளன.
இந்த திட்டத்திற்கு மாநில அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கும். விண்வெளி ஏவுதளங்களுக்கான உலகளாவிய சந்தை பல பில்லியன்களாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது இது 14 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது 2030-ல் 32 பில்லியன் டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் சந்தை பங்கு 2 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் வருவதால் விண்வெளி ஏவுதள சந்தையில் இந்தியா சுமார் 10 சதவீதத்தை இலக்காக கொள்ள முடியும்.
இது 3 பில்லியன் டாலர் மதிப்புடையதாக இருக்கும். இதில் தமிழகம் 2 பில்லியன் டாலர்களை எளிதாக அடைய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.