நாய்கள் கடித்ததில் காயமடைந்த குரங்கை அழகுமாரி மீட்டு வைத்திருக்கும் காட்சி.
அலங்காநல்லூர் அருகே நாய்களிடம் சிக்கி காயமடைந்த குரங்கை மீட்ட பெண்- பொதுமக்கள் பாராட்டு
- அழகுமாரி என்ற பெண் நாய்களிடம் சிக்கிய குரங்கை கண்டு பரிதாபப்பட்டார்.
- குரங்கை மீட்காவிட்டால் நாய்கள் கடித்துக் கொன்றுவிடும் என்பதால் அவர் தன்னை பற்றி கவலைப்படாமல் நாய்களை விரட்டி விட்டு குரங்கை காப்பாற்றினார்.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முல்லைப்பெரியாறு ஆற்றங்கரையில் உள்ள மரங்களில் ஏராளமான குரங்குகள் வசித்து வருகின்றன. இந்த குரங்குகளை நாய்கள் துரத்துவதும், நாய்களை குரங்குகள் துரத்துவதும் அடிக்கடி வாடிக்கையாக நடக்கும்.
இந்தநிலையில் இன்று காலை ஆற்றங்கரையில் தனியாக சுற்றித்திரிந்த ஒரு கர்ப்பிணி பெண் குரங்கை 2 நாய்கள் துரத்திச்சென்று கடிக்க பாய்ந்தன. நாய்களிடம் சிக்காமல் அந்த குரங்கு தப்பி ஓடியது. ஆனால் நாய்கள் தொடர்ந்து குரங்கை விரட்டிச்சென்று கடித்துக் குதறின.
இதைப்பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த அழகுமாரி(வயது40) என்ற பெண் நாய்களிடம் சிக்கிய குரங்கை கண்டு பரிதாபப்பட்டார். உடனடியாக குரங்கை மீட்காவிட்டால் நாய்கள் கடித்துக் கொன்றுவிடும் என்பதால் அவர் தன்னை பற்றி கவலைப்படாமல் நாய்களை விரட்டி விட்டு குரங்கை காப்பாற்றினார். பின்னர் சின்னப்பட்டி கிராம கால்நடை மருத்துவமனைக்கு அந்த குரங்கை தூக்கிச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் அந்த குரங்கை மீட்ட இடத்தில் கொண்டு சென்று விட்டார். இதனை கண்ட பொதுமக்கள் நாய்களிடம் இருந்து குரங்கை காப்பாற்றிய அழகுமாரிக்கு பாராட்டு தெரிவித்தனர்.