தமிழ்நாடு

ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து வெளியேறும் நீரை படத்தில் காணலாம்.

ஒரத்துப்பாளையம் அணையில் ஒரே நாளில் 10 அடி நீர்மட்டம் உயர்வு

Published On 2023-11-11 04:49 GMT   |   Update On 2023-11-11 04:49 GMT
  • நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
  • இரவு, பகலாக பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஒரத்துப்பாளையம் அணைக்கு வரும் தண்ணீரை கண்காணித்து வருகின்றனர்.

சென்னிமலை:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ளது ஒரத்துப்பாளையம் அணை. இந்த அணையின் உயரம் 40 அடி ஆகும். சமீபத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் 7 அடி வரை உயர்ந்தது.

இந்த தண்ணீரை அப்படியே நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டதால் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) 5 அடியாக நீர்மட்டம் இருந்தது. அப்போது அணைக்கு 174 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் ஒரத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று (வெள்ளிக்கிழமை) அணைக்கு 525 கன அடியாக நீர்வரத்து இருந்ததால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து 15.26 அடியாக இருந்தது.

நேற்று அணைக்கு வந்த தண்ணீரில் 566 என்ற அளவில் மிக குறைவாக டி.டி.எஸ் (உப்புத்தன்மை) இருந்ததாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் இரவு, பகலாக பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஒரத்துப்பாளையம் அணைக்கு வரும் தண்ணீரை கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News