தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி நோக்கி கல்வீச்சு.. ஓ.பி.எஸ். என்ன சொன்னாரு தெரியுமா?

Published On 2023-10-31 14:27 GMT   |   Update On 2023-10-31 14:27 GMT
  • இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
  • சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை.

முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரின் நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தனது காரில் ஏறி, அங்கிருந்து கிளம்ப முற்பட்டார்.

அப்போது, அங்கிருந்தவர்களில் சிலர், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் அவரது காரை நோக்கி கற்கள் மற்றும் காலணிகளை வீசினர். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பிறகு கற்கள் மற்றும் காலணிகளை வீசியர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வத்திடம் எடப்பாடி பழனிசாமிக்கு அரங்கேறிய தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஓ. பன்னீர்செல்வம், "நான் எனது சமூக வலைதள பதிவுகளின் மூலம் அறிவுறுத்தி இருந்தேன். பசும்பொன் எனும் புண்ணிய பூமிக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு தொந்தரவையோ, துயரத்தையோ கொடுக்கக்கூடாது என்பது என் வேண்டுகோளாக உள்ளது என குறிப்பிட்டு இருந்தேன். இது போன்ற சம்பவம் நடந்திருக்கக்கூடாது," என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News