தமிழ்நாடு செய்திகள்

ஒரே வகுப்பறையில் 2 ஆசிரியர்கள் பாடம் நடத்தும் காட்சி.


அரசு பள்ளியில் ஒரே வகுப்பறையில் 2 வகுப்புகள்- இடவசதி இல்லாமல் 2 ஆசிரியர்கள் பாடம் நடத்துகிறார்கள்

Published On 2022-07-07 16:29 IST   |   Update On 2022-07-07 16:29:00 IST
  • அரசு பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததால் ஒரே வகுப்பறையில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி மாணவர்களை உட்கார வைத்து பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
  • மாணவ-மாணவிகளுக்கு ஒரே வகுப்பறையில் இரண்டு மொழி பாடங்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால் பாடங்களில் கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.

சேலம்:

சேலம் சீலநாய்க்கன்பட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 5-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 220 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு 12 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அனைத்து வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் மொத்தம் 4 வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. இதனால் ஒரே வகுப்பறையில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பாடம் நடத்துவதற்காக மாணவ மாணவிகள் அமர வைக்கப்பட்டு, ஒரே பிளாக் போர்ட்டை இரண்டாக பிரித்துக்கொண்டு ஒருபுறம் தமிழ் வழி பாடமும், இன்னொரு புறம் ஆங்கில வழி பாடமும் இரண்டு ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

இதனால், மாணவ-மாணவிகளுக்கு ஒரே வகுப்பறையில் இரண்டு மொழி பாடங்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால் பாடங்களில் கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும் பள்ளிக்கு பின்புறம் உள்ள சமையல் கூடம் அருகே 7-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் தரையில் அமர வைக்கப்பட்டு பாடம் நடைபெற்று வருகிறது.

அதேபோல மரத்தடியில் பிளாக் போர்டை வைத்து ஆசிரியர் மற்றொரு வகுப்புக்கு பாடம் நடத்தி வருகிறார்கள். இதனால் வெயில் காலங்களிலும் மழை காலங்களிலும் மாணவர்கள் கடும் பாதிப்புள்ளாகும் நிலை உள்ளது. எனவே அரசு உடனடியாக கூடுதல் வகுப்பறைகள் ஏற்படுத்தி தர வேண்டும் என பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகளவில் நடைபெற்ற போதிலும் தற்பொழுது போதிய வகுப்பறை இல்லாத காரணத்தினால் பள்ளியில் புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்கள் மாற்றுச்சான்றிதழ் வாங்கி வேறு பள்ளியை நோக்கி செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதே நிலை நீடித்தால் இந்த அரசு பள்ளி விரைவில் மூடும் நிலை உருவாகும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே பள்ளியில் சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி அந்த பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது கூடுதல் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Tags:    

Similar News