தமிழ்நாடு

சென்னையில் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

Published On 2023-05-30 09:03 GMT   |   Update On 2023-05-30 10:35 GMT
  • தனியார்மயக் கொள்கையில் தி.மு.க. அரசு தீவிரமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது.
  • காலிப் பணியிடங்களை முறையாக நிரந்தர அடிப்படையில் நிரப்பிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பஸ் போக்குவரத்தில் தனியார் அனுமதிக்கப்படுவர் என்ற செய்தி வந்தபோது அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது போக்குவரத்துக் கழகங்களுக்கான பணியாளர்களை வெளிமுகமை மூலம், அதாவது தனியார் ஏஜென்சி மூலம் தி.மு.க. அரசு பணியமர்த்தியுள்ளது தொழிலாளர்களிடையே மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது.

இதிலிருந்து தனியார்மயக் கொள்கையில் தி.மு.க. அரசு தீவிரமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது. தனியார் ஏஜென்சி மூலம் ஒப்பந்த அடிப்படையில் முதற்கட்டமாக 500-க்கும் மேற்பட்ட பணியாளர்களை தி.மு.க. அரசு நியமித்து இருக்கிறது. இதனைக் கண்டித்து, சென்னை மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் திடீரென நேற்று மாலை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் கடும் அவதிக்குள்ளாயினர். தனியார் ஏஜென்சி மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை நியமிப்பது தொழிலாளர் விரோத நடவடிக்கை என்பதையும், சமூகநீதிக்கு எதிரானது என்பதையும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படுத்தும் என்பதையும், போக்குவரத்துக் கழகங்கள் அழிந்துவிடும் என்பதையும் கருத்தில் கொண்டு, போக்குவரத்துக் கழகங்களில் வெளிமுகமை மூலம் ஆட்கள் அமர்த்தப்படுவதை உடனடியாக கைவிட்டு, பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாவதை இனி வருங்காலங்களில் தடுத்து நிறுத்தவும், காலிப் பணியிடங்களை முறையாக நிரந்தர அடிப்படையில் நிரப்பிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News