தமிழ்நாடு

தொண்டர்கள் விரும்பும் வகையில் என் அரசியல் பயணம் இருக்கும்- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2022-09-15 09:49 GMT   |   Update On 2022-09-15 09:49 GMT
  • நாங்கள் முழுமையாக நம்புவது அ.தி.மு.க.வின் தொண்டர்களை மட்டுமே.
  • தொண்டர்கள் இந்த இயக்கம் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறார்களோ அந்த வழியில் தான் எனது அரசியல் பயணம் இருக்கும்.

சென்னை:

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சினையால் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது.

கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

அந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு அவருக்கு எதிராகவே அமைந்தது. பொதுக்குழு செல்லும் என்று ஐகோர்ட்டு அறிவித்தது. அதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார்.

இதற்கிடையில் தலைமை கழக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியது சரிதான் என்று சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்து உள்ளது.

பலவீனமான நிலையில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த சூழ்நிலையில் நேற்று இரவு அசோக் நகரில் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் வீட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றார். அவருடன் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

சுமார் 1.30 மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. பண்ருட்டி ராமச்சந்திரன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு ஆலோசனை வழங்கியவர்.

தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க.வை கைப்பற்ற என்ன வழி என்று ஓ.பி.எஸ். ஆலோசனை கேட்டு உள்ளார். நிர்வாகிகள் அதிக அளவில் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருந்தாலும் தொண்டர்கள் பலம் தனக்கு இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார்.

கட்சி விதிகள், கட்சியை கைப்பற்றுவதற்கான வியூகங்கள் பற்றி பண்ருட்டி ராமச்சந்திரனிடம் ஆலோசனை கேட்டுள்ளார்கள்.

ஏற்கனவே கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு சசிகலாவும் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பு முடிந்ததும் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இயக்கத்திற்காக அரும்பாடு பட்டவர் என்ற அடிப்படையில் மரியாதை நிமித்தமாகவே பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்தோம்.

நாங்கள் முழுமையாக நம்புவது அ.தி.மு.க.வின் தொண்டர்களை மட்டுமே. தொண்டர்கள் இந்த இயக்கம் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறார்களோ அந்த வழியில் தான் எனது அரசியல் பயணம் இருக்கும். அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். அது ஒன்று தான் எங்கள் இதய பூர்வமான எண்ணம். எங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை பொறுத்திருந்து பாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News