தமிழ்நாடு

நெல்லை அருகே தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை

Published On 2023-08-20 03:52 GMT   |   Update On 2023-08-20 03:52 GMT
  • கணேசனிடம், ராஜகோபால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
  • கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ராஜகோபால் வீரவநல்லூர் போலீசில் சரணடைந்தார்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள அத்தாளநல்லூர் பஞ்சாயத்துக்குட்பட்ட கொட்டாரக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கனி என்ற கணேசன்(வயது 50). கூலித்தொழிலாளி.

இவர் நேற்று இரவு அப்பகுதியில் நின்று கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த கனி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தகவல் அறிந்து வீரவநல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று கனியை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கொன்ற மர்ம நபர் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அத்தாளநல்லூரை சேர்ந்தவர் சிவன் பாண்டி. இவரது மனைவி சிதம்பரத்தம்மாள். இவர் அத்தாளநல்லூர் பஞ்சாயத்து தலைவியாக இருந்து வருகிறார். இவர்களது மகன் ராஜகோபால்(40). கொலை செய்யப்பட்ட கணேசன், பஞ்சாயத்து நிர்வாகம் மீது அடிக்கடி புகார் தெரிவித்து அதிகாரிகளுக்கு மனு அனுப்பியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் நேற்று இரவு கொட்டாரக்குறிச்சி ரோட்டில் நின்று கொண்டிருந்த கணேசனிடம், ராஜகோபால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ராஜகோபால் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கணேசனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதற்கிடையே கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ராஜகோபால் வீரவநல்லூர் போலீசில் சரணடைந்தார்.

Tags:    

Similar News