தமிழ்நாடு செய்திகள்

அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்பு 26-ந்தேதி தொடக்கம்

Published On 2022-11-21 11:16 IST   |   Update On 2022-11-21 11:16:00 IST
  • ஒரு நீட் பயிற்சி மையத்திற்கு 70 மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகம் முழுவதும் 29 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆண்டு நீட் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

சென்னை:

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் மதிப்பெண் அவசியமாகிறது. நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவர்களே அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.

தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சிறப்பு பயிற்சி வகுப்பு மூலம் தேர்ச்சி பெற்று வருகின்றனர். ஆனால் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களால் பயிற்சி பெற இயலாத நிலை இருந்தது. அவற்றை போக்கும் வகையில் இலவச பயிற்சி பள்ளிக்கல்வித்துறை மூலம் வழங்கப்படுகிறது. கொரோனா பாதிப்பால் 2 வருடமாக ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

இந்த ஆண்டு நேரடி பயிற்சி வகுப்பு நடத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் இலவச நீட் பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடு கடந்த சில நாட்களாக நடந்து வந்தன.

முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் தமிழகத்தில் உள்ள 414 பிளாக்குகளில் ஒரு பிளாக்கிற்கு ஒரு மையம் வீதம் 414 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நீட் பயிற்சி மையத்திற்கு 70 மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி தமிழகம் முழுவதும் 29 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆண்டு நீட் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

11-ம் வகுப்பில் 20 பேரும், 12-ம் வகுப்பில் 50 பேரும் இப்பயிற்சி வகுப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டிற்கான பயிற்சி வகுப்பு வருகிற 26-ந்தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதற்கான அறிமுக வகுப்பு நேற்று முன்தினம் நடந்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளி மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் கூறியதாவது:-

நீட், ஐ.ஐ.டி., ஜே.இ., உள்ளிட்ட போட்டி தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள வசதியாக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னையில் 10 மையங்களில் 700 மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை காலை 9-மணி முதல் மாலை 4-மணி வரை நீட் பயிற்சி வழங்கப்படும்.

100 முதுகலை ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் பாட ஆசிரியர்களுக்கு இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு, இதற்கான 'மெட்டிரியல்' அரசு சார்பில் வழக்கப்படும்.

சென்னயில் அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, லேடி வெலிங்டன் மேல்நிலைப்பள்ளி, வில்லிவாக்கம் ஜி.கே.எம். காலனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட அரசு பள்ளிகள் மையங்களாக செயல்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News