தமிழ்நாடு

டாக்டர் தம்பதி வீட்டில் 87 பவுன் நகைகள்-ரூ.3 லட்சம் கொள்ளை

Published On 2024-01-07 07:38 GMT   |   Update On 2024-01-07 07:38 GMT
  • வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அங்கு பீரோ பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
  • போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே உள்ள பிளசண்ட் நகரை சேர்ந்தவர் டாக்டர் கலைக்குமார் (வயது 52). இவர் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி டாக்டர் புனிதவதி, சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் வெளியூரில் படித்து வருகிறார்.

மனைவி மற்றும் மகள் வாரத்திற்கு ஒரு முறை தான் வீட்டுக்கு வருவார்களாம். கலைக்குமார் தான் வீட்டில் இருந்து வந்துள்ளார். அவரும் தினமும் காலை 7.30 மணிக்கு பணிக்காக நெல்லை மருத்துவக் கல்லூரிக்கு கிளம்பி சென்று விடுவாராம். அதன்பிறகு மாலை அல்லது இரவு நேரத்தில் தான் அவர் வீடு திரும்புவார்.

நேற்று காலையும் வழக்கம் போல் வேலைக்குச் சென்ற கலைக்குமார், இரவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அங்கு பீரோ பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

அதில் இருந்த பொருட்கள் மற்றும் துணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதனால் கொள்ளை சம்பவம் நடந்திருப்பதை உணர்ந்த அவர், நேசமணி நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்த்தனர். வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து யாரோ மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பீரோவில் இருந்த 87 பவுன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் கொள்ளை போயிருப்பதாக போலீசாரிடம் கலைக்குமார் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளை நடந்த பிளசண்ட் நகர் பகுதி வசதி படைத்தவர்கள் வாழும் பகுதியாகும். இங்கு வீடுகளும் நெருக்கமாகவே உள்ளன. அப்படியிருந்தும் ஆள் இல்லாத வீட்டை நோட்டமிட்டு கொள்ளையர்கள் லாவகமாக வீட்டுக்குள் புகுந்து நகை-பணத்தை அள்ளிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே ஆள் இல்லாத வீட்டில் இதுபோன்று கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

ஆனாலும் கொள்ளை யர்கள், போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே இதனை தடுக்க கொள்ளையர்களை போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News