தமிழ்நாடு செய்திகள்

தோஷம் நிவர்த்தி செய்வதாக கூறி முதியோரை ஏமாற்றி நகை, பணம் கொள்ளையடித்த மர்மநபர்

Published On 2023-09-12 16:09 IST   |   Update On 2023-09-12 16:09:00 IST
  • நம்பிய வயதான தம்பதி மற்றும் அவர்களது மகன் செல்வராஜ் ஆகிய 3 பேரும் பூஜைக்கு ஏற்பாடு செய்தனர்.
  • போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் அருகே காப்பரத்தாம்ப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (70). இவரது மனைவி செல்லம்மாள்.

சம்பவத்தன்று இவர்களது வீட்டிற்கு வந்த மர்மநபர் ஒருவர் உங்கள் வீட்டில் தோஷம் உள்ளது. வீட்டில் பூஜை செய்தால் தோஷம் நிவர்த்தி ஆகும் என்று கூறியுள்ளார்.

இதனை நம்பிய வயதான தம்பதி மற்றும் அவர்களது மகன் செல்வராஜ் ஆகிய 3 பேரும் பூஜைக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது அந்த மர்மநபர் உங்கள் வீட்டில் உள்ள நகை, பணத்தை எல்லாம் கொண்டு வந்து பூஜையில் வைக்க வேண்டும். பூஜை முடிந்தவுடன் திருப்பி தருவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து வீட்டில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி, ரூ.2 ஆயிரம் பணத்தை பூஜையில் வைத்துள்ளனர். அப்போது மந்திரம் சொல்லியபடி 3 பேர் தலையிலும் குச்சி ஒன்றை வைத்துள்ளார். இதில் பூஜையில் அமர்ந்திருந்த 3 பேருக்கும் சிறிதுநேரம் சுய நினைவு இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த நபர் வீட்டில் இருந்த நகை, பணத்துடன் வேகமாக தப்பி சென்றுள்ளான். பின்னர் சுயநினைவுக்கு திரும்பிய 3 பேரும் அந்த மர்மநபர் அங்கு இல்லாததால், நகை, பணம் கொள்ளையடிப்பட்டு இருந்ததை பார்த்தும் கடும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறினர்.

இதேபோல் அதே பகுதியை சேர்ந்த மூதாட்டி அய்யம்மாள் (62) என்பவரிடமும் நேரம் சரியில்லை என்று கூறி வீட்டில் பூஜை செய்து ரூ.5 ஆயிரத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இந்த சம்பவங்கள் குறித்து தோரமங்களம் பஞ்சாயத்து தலைவர் சுந்தரம் ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் பதிவாகி இருந்த மர்ம நபரின் உருவத்தை வைத்து அந்த பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News