தமிழ்நாடு செய்திகள்

8 கிலோ மீட்டர் தூரத்துக்கு 38 மாவட்டங்களிலும் ஆரோக்கிய நடைபாதை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Published On 2023-06-23 13:00 IST   |   Update On 2023-06-23 13:00:00 IST
  • 8 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்படும் இந்த பாதையின் இரண்டு பக்கமும் மரங்கள் இருக்கும்.
  • இலவசமாக சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் பரிசோதனையும் செய்யப்படும்.

சென்னை:

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 8 கிலோ மீட்டர் தூரம் ஆரோக்கியத்துக்கான நடைபயிற்சி பாதை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்து இருந்தார். இதற்கான பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகிறது. மதுரையில் நடைபெறும் பணிகளை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மூர்த்தி ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.

இந்த நடைபாதை பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

உடல் ஆரோக்கியத்துக்கு நடைபயிற்சி முக்கியம். எனவே மக்களிடம் நடை பயிற்சியை ஊக்குவிக்கவும், நடை பயிற்சிக்கான சூழலை உருவாக்கி தருவதும் தான் இந்த திட்டத்தின் நோக்கம்.

8 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்படும் இந்த பாதையின் இரண்டு பக்கமும் மரங்கள் இருக்கும். ஆசுவாசப்படுத்திக் கொள்ள பெஞ்ச் அமைக்கப்பட்டிருக்கும். கி.மீ. அளவு பொறிக்கப்பட்ட போர்டுகள் இருக்கும். ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு குறிப்புகள் இருக்கும்.

மாதம் தோறும் முதல் ஞாயிற்றுக் கிழமை சுகாதாரத் துறை அதிகாரிகள் நடைபயிற்சி மேற்கொள்பவர்களிடம் கலந்துரையாடுவார்கள். சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பார்கள்.

இலவசமாக சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் பரிசோதனையும் செய்யப்படும். வாரத்தில் ஒரு நாள் தண்ணீர், பழம் இலவசமாக வழங்கப்படும். நடை பயிற்சி செய்வோர் நல குழுக்களும் இதில் பங்கேற்கலாம்.

ஜப்பானில் இதேபோல் ஒரு இடத்தில் அமைக்கப்பட்டிருந்ததை பார்த்து முதலஅமைச்சரிடம் தெரிவித்தேன். அவர் 38 மாவட்டங்களிலும் அமைக்கும்படி உத்தரவிட்டார். அனைத்து மாவட்டங்களிலும் பாதைகள் அமைக்கும் பணி முடிவடைந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News