தமிழ்நாடு செய்திகள்

ஷெனாய் நகர், ஆலந்தூரில் 100 படுக்கை வசதியுடன் 2 புதிய ஆஸ்பத்திரிகள் 2 மாதத்தில் திறக்கப்படும்: அமைச்சர் தகவல்

Published On 2023-11-11 14:44 IST   |   Update On 2023-11-11 14:44:00 IST
  • வருகிற 15-ந்தேதி புதுக்கோட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பல் மருத்துவ கல்லூரியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திறக்கிறார்.
  • தமிழகம் முழுவதும் 708 நலவாழ்வு மையங்கள் தொடங்க திட்டமிட்டு 500 மையங்கள் திறக்கப்பட்டு விட்டன.

சென்னை:

தமிழ்நாட்டில் மழைக்கால நோய்களை கட்டுப்படுத்த வருகிற டிசம்பர் மாதம் வரை ஞாயிற்றுக்கிழமைகளில் 1000 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். நாளை தீபாவளி என்பதால் 3-வது மருத்துவ முகாம் இன்று நடத்தப்பட்டது.

அமைந்தகரையில் நடத்தப்பட்ட முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

கல்வியும், சுகாதாரமும் இரு கண்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி மருத்துவ கட்டமைப்புகள் எல்லா நிலைகளிலும் பலப்படுத்தப்பட்டு வருகிறது.

வருகிற 15-ந்தேதி புதுக்கோட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பல் மருத்துவ கல்லூரியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திறக்கிறார்.

தமிழகம் முழுவதும் 708 நலவாழ்வு மையங்கள் தொடங்க திட்டமிட்டு 500 மையங்கள் திறக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள 208-ல் 152 நலவாழ்வு மையங்கள் கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளன.

இதில் சென்னை ஷெனாய் நகர், ஆலந்தூரில் 2 புதிய மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு மருத்துவமனையும் தலா ரூ.13 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைகள் ஒவ்வொன்றும் 5 மாடிகள் மற்றும் 100 படுக்கை வசதி கொண்டவை.

இது தவிர நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், பி.கே.கார்டன், பி.ஆர்.என். கார்டன், சி.எஸ்.நகர், வெங்கடாபுரம், சேத்துபட்டு, முத்தையா முதலி தெரு, திருவான்மியூர் ஆகிய இடங்களில் அமைக்கப்படுகிறது.

இன்னும் 2 மாதத்தில் இந்த பணிகள் நிறைவடைந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதை தொடர்ந்து ஷெனாய் நகரில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவமனை கட்டிடத்தை மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். இதில் மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன், எம்.கே.மோகன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News