தமிழ்நாடு

சேத்துப்பட்டு ஏரிக்கு அடியில் இந்த ஆண்டு இறுதிக்குள் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கும்- அதிகாரிகள் தகவல்

Published On 2023-06-01 10:13 GMT   |   Update On 2023-06-01 10:13 GMT
  • சேத்துப்பட்டு புறநகர் மின்சார ரெயில் நிலையத்துடன் இணைக்கப்படுவதால், சேத்துப்பட்டு மெட்ரோ ரெயில் நிலையம் ஒரு பரிமாற்ற மையமாக இருக்கும்.
  • மாதவரம் பால்பண்னை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை போன்ற புறநகர் பகுதிகளை சேத்துப்பட்டு, நுங்கம்பக்கம், மயிலாப்பூர், அடையாறு போன்ற முக்கிய பகுதிகளுடன் இணைக்கிறது.

சென்னை:

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது. இதில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்களை இயக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. 3-வது வழித்தடமான மாதவரம் பால்பண்ணை- சிறுசேரி சிப்காட் இடையே 45.8 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்படுகிறது.

இந்த வழித்தடம் சேத்துப்பட்டு ஏரி வழியாக செல்கிறது. இதற்காக சேத்துப்பட்டு ஏரிக்கு அடியில் சுரங்கம் தோண்டப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் சுரங்கம் தோண்டும் பணி தொடங்க இருக்கிறது.

இது தொடர்பாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

மெட்ரோ ரெயில் பணிக்காக சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் தண்டவாளம் அமைக்கும் பணியை தொடங்கினோம். இதற்கு குறைந்தது 6 மாதங்கள் ஆகும். அதன் பிறகு சுரங்கம் தோண்டும் எந்திரத்தை இணைக்க மேலும் ஒரு மாதம் ஆகலாம். எனவே சேத்துப்பட்டு ஏரிக்கு அடியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும்.

இதற்கான துளையிடும் எந்திரம் தொழிற்சாலையில் சோதனை முடிந்து தயாராக வைக்கப்பட்டுள்ளது. இந்த துளையிடும் எந்திரம் சேத்துப்பட்டு ஏரியின் கீழ் 22 மீட்டர் ஆழத்தில் மண்ணை துளையிட்டு சுரங்கப்பாதை அமைக்கும். இந்த எந்திரம் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு எதிரே உள்ள சாலையில் திட்டமிடப்பட்டுள்ள கீழ்ப்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தை அடையும். இங்கு சுரங்கப்பாதை 29 மீட்டர் ஆழத்தில் இருக்கும். இது 2 ரெயில் நிலையங்களுக்கு இடையே 838 மீட்டர் தூரத்தை கடக்கும்.

இந்த வார தொடக்கத்தில் சேத்துப்பட்டு மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள ஒரு பகுதியில் என்ஜினீயர்கள் சுரங்கப்பாதை மற்றொரு துளையிடும் எந்திரத்தை இணைக்க தொடங்கினர். இந்த எந்திரம் ஜூலை மாதம் சேத்துப்பட்டு மெட்ரோவில் இருந்து ஸ்டெர்லிங் ரோடு சந்திப்பு வரை 845 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியை தொடங்கும்.

சேத்துப்பட்டு புறநகர் மின்சார ரெயில் நிலையத்துடன் இணைக்கப்படுவதால், சேத்துப்பட்டு மெட்ரோ ரெயில் நிலையம் ஒரு பரிமாற்ற மையமாக இருக்கும். இந்த வழித்தடம் மாதவரம் பால்பண்னை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை போன்ற புறநகர் பகுதிகளை சேத்துப்பட்டு, நுங்கம்பக்கம், மயிலாப்பூர், அடையாறு போன்ற முக்கிய பகுதிகளுடன் இணைக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News