மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1281 கனஅடியாக அதிகரிப்பு
- மழை பெய்தால் நீர்வரத்து மேலும் அதிகரித்து 2 அணைகளும் விரைவில் நிரம்பும் தருவாயில் உள்ளது.
- 2 அணைகளும் நிரம்பினால் தான் உபரி நீர் தமிழகத்துக்கு அதிகளவில் திறக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குறிப்பாக கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்துழ 686 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 100.30 அடியை எட்டி இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 546 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதே போல் மைசூரு மாவட்டம் கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும். இன்று அணையின் நீர்மட்டம் 81.12 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 321 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. 2 அணைகளுக்கும் 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இனிவரும் நாட்களில் மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே மழை பெய்தால் நீர்வரத்து மேலும் அதிகரித்து 2 அணைகளும் விரைவில் நிரம்பும் தருவாயில் உள்ளது. இந்த 2 அணைகளும் நிரம்பினால் தான் உபரி நீர் தமிழகத்துக்கு அதிகளவில் திறக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. எனவே அடுத்த வாரம் இறுதியில் காவிரியில் நீர்வரத்து அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 1223 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று வினாடிக்கு 1281கன அடியாக அதிகரித்து காணப்பட்டது. அணையின் நீர்மட்டம் 39.70 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 11.93 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.