மேட்டூர் அணை நீர்மட்டம் 10 நாட்களில் 16 அடி உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
- அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவே திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
- அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து உரிய தண்ணீரை வழங்காததாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது.
இதையடுத்து கடந்த 10-ந்தேதி காலை 6 மணியுடன் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து குடிநீருக்கு மட்டும் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரத்து 355 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை மேலும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 46.67 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 714 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கடந்த 10-ந்தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30 அடியாக இருந்த நிலையில் இன்று நீர்மட்டம் 46.67 அடியை எட்டியுள்ளது. கடந்த 10 நாட்களில் அணையின் நீர்மட்டம் 16 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவே திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தற்போது மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் நீர்வரத்து மேலும் அதிகரித்து இன்னும் சில நாட்களில் அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.