தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 44.60 அடியாக உயர்வு

Published On 2023-10-18 09:43 IST   |   Update On 2023-10-18 09:43:00 IST
  • குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
  • கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

சேலம்:

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் குறைந்தது. மேலும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து உரிய தண்ணீர் வழங்காததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 10-ந்தேதி காலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டது.

ஆனாலும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் கடந்த 10-ந் தேதி 30 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 44.60 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 846 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 14.58 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

இதே போல் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 101.02 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2ஆயிரத்து 566 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து 1992 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணையின் நீர்மட்டம் 75.20 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1432 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 2 ஆயிரத்து 292 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News