மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
- அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து கடந்த 3 மாதத்துக்கும் மேலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் அணையில் மூழ்கி இருந்த ஜல கண்டேஸ்வரர் கோவில் நந்திசிலை, கிறிஸ்துவ ஆலய கோபுரம் ஆகியவை முழுமையாக வெளியே தெரிகிறது.
மேலும் அணையின் நீர்த்தேக்க பகுதிகள் வறண்டு காணப்படுகிறது. அணையின் பல இடங்களில் தண்ணீர் இல்லாததால் நிலம் பாளம், பாளமாக வெடித்து காணப்படுகிறது.
தண்ணீர் குறைந்து மேட்டூர் அணை குட்டை போல் மாறியது. இதனால் நீர்த்தேக்க பகுதிகள் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறியது.
மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி முழுமைபெறுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கடந்த 3 நாட்களாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நேற்று மாலை முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 48.48 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5018 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. தற்போது அணையில் 16.86 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது. இதில் இன்னும் 10.86 டி.எம்.சி.தண்ணீரே பாசனத்துக்கு திறக்கப்படும்.
கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.86 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2870 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 7078 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதே போல் கபினி அணையின் நீர்மட்டம் 73.78 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1979 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து மொத்தம் 9 ஆயிரத்து 78 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.