தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரத்து 444 கன அடியாக அதிகரிப்பு

Published On 2023-07-28 09:24 IST   |   Update On 2023-07-28 09:24:00 IST
  • தண்ணீர் வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
  • ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம்:

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டுகிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த தொடர் கனமழையால் முக்கிய அணைகளான ஹாரங்கி, ஹேமாவதி, கபினி, கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியதால் 70 அடியாக இருந்த கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கபினி அணையும் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

அதாவது, கபினியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கபிலா ஆற்றிலும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் காவிரி ஆற்றிலும் பாய்ந்தோடி, டி.நரசிப்புரா அருகே திருமாகூடலு சங்கமாவில் ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி பாய்ந்தோடுகிறது.

தமிழகம்-கர்நாடக எல்லையான பிலிகுண்டு பகுதியில் இந்த தண்ணீர் வந்து சேர்ந்து அங்கிருந்து ஒகேனக்கல்லுக்கு செல்கிறது. பிலிகுண்டு பகுதிக்கு இன்று காலை வினாடிக்கு 19 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் பிலிகுண்டுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு நீர்வரத்தை அளந்து கண்காணித்து வருகின்றனர்.

தண்ணீர் வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் 3-வது நாளாக தடை விதித்துள்ளது. இதனால் பரிசல்துறை அருகே பரிசல்கள் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று மாலையில் 10 ஆயிரத்து 232 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையில் நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 12 ஆயிரத்து 444 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து பாசன தேவைக்காக காவிரி ஆற்றில் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகமாக இருந்ததால் நேற்று முன்தினம் காலையில் 65.80 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலையில் 64.80 அடியாக சரிந்தது.

தற்போது அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் நேற்று 64.80 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 64.90 அடியாக உயர்ந்தது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News