தமிழ்நாடு செய்திகள்

அரசியலுக்காக மேகதாது அணை கட்டியே தீருவோம் என்பார்கள்- துரைமுருகன் பேட்டி

Published On 2023-07-09 13:18 IST   |   Update On 2023-07-09 13:18:00 IST
  • இயற்கையாக வரும் இடத்தில் அணையை கட்டுவது என்பது உகந்தது அல்ல.
  • அ.தி.மு.க ஆட்சியில் கனிம வளத்தில் சுமார் ரூ.1300 கோடி வரை நஷ்டம் ஏற்படுத்தினார்கள்.

வேலூர்:

வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணையை கட்டுவோம். என்பது கர்நாடகா அரசின் ஆசை, ஆனால் அவர்களுக்கு உரிமை கிடையாது. அணையை கட்டக்கூடாது என சொல்வதற்கான உரிமை நமக்கு உண்டு.

காரணம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் கபினிக்கு கீழே 80 டிஎம்சி தண்ணீர் இயற்கையாக நமக்கு வருகிறது. இயற்கையாக வரும் இடத்தில் அணையை கட்டுவது என்பது உகந்தது அல்ல.

2-வது அவர்கள் அணையை கட்டிட முடியாது, காரணம் மத்திய நீர் மேலாண்மை வாரியம் இதற்கு அனுமதி கொடுக்க வேண்டும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்க வேண்டும், பிறகு வனத்துறையினர் அனுமதி அளிக்க வேண்டும், இதற்குப் பிறகும் கட்ட வேண்டியிருந்தால் நீதிமன்றம் செல்ல வேண்டும். இப்படி பல விஷயங்கள் உள்ளது.

அரசியலுக்காக அவர்கள் கட்டியே தீருவோம் என்பார்கள் நாங்கள் கட்ட விட மாட்டோம் என்போம். அவ்வளவுதான். அணை கட்ட முடியாது. அதனை கட்ட நாங்கள் விட மாட்டோம்.

அ.தி.மு.க ஆட்சியில் கனிம வளத்தில் சுமார் ரூ.1300 கோடி வரை நஷ்டம் ஏற்படுத்தினார்கள். நாங்கள் அதை நிரப்பி தற்போது 1600 கோடி ரூபாய் லாபத்தை காட்டியிருக்கிறோம்.

ரூ.1000 உரிமைத் தொகை யாருக்கு கிடைக்க வாய்ப்பில்லை என எழுதி கொடுக்க சொல்லுங்கள். அதை நான் கவனிக்கிறேன், எதிர்க்கட்சிகள் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் குகையநல்லூர், அரும்பருதி, பொய்கை கோவிந்தம்பாடி, பரமசாத்து உள்ளிட்ட பல இடங்களில் தடுப்பணை கட்டப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News