தமிழ்நாடு

'மாலைமலர்' செய்தி எதிரொலி: மூதாட்டிக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது

Published On 2024-01-13 10:59 GMT   |   Update On 2024-01-13 10:59 GMT
  • டோக்கனை மட்டும் வழங்கிவிட்டு கைரேகை பதியவில்லை எனக் கூறி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை.
  • பொங்கல் பரிசு பெற்ற மூதாட்டி மாலைமலர் நாளிதழுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

அம்பத்தூர்:

அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குப்பம் முத்தமிழ் நகர் பகுதியில் வசித்து வருபவர் வள்ளியம்மாள் (70). இவரது கணவர் தாமோதரன் இறந்து ஐந்து வருடங்கள் ஆகும் நிலையில் இவரது மகனும் மாரடைப்பில் இறந்து விட்டார்.

இந்த நிலையில் அவருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டும் சுமார் 2 வருட காலமாக ரேசன் கடைகளில் எந்த விதமான பொருட்களும் வழங்கப்படவில்லை. வெள்ள நிவாரணம் முதல் பொங்கல் தொகுப்பு மற்றும் பணம் வரை இதுவரை தனக்கு வழங்கப்படவில்லை எனவும் ரேசன் கடைக்குச் சென்று கேட்கும் பொழுது கைரேகை சரிவர பதியவில்லை என கூறி அலட்சியப்படுத்தி அனுப்பி வருவதாகவும் இதனால் மனவேதனையில் இருப்பதாகவும் வள்ளியம்மாள் கண் கலங்கினார்.

பொங்கல் பணம் மற்றும் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கனை மட்டும் வழங்கிவிட்டு கைரேகை பதியவில்லை எனக் கூறி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை.

இது குறித்த செய்தி நேற்று மாலை மலரில் வெளிவந்தது. இதை பார்த்து உடனடியாக உணவு பொருள் வழங்கல் துறை உயர் அதிகாரிகள் அம்பத்தூர் மண்டல உணவு பொருள் வழங்கல் உதவி ஆணையருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து இன்று காலை கள்ளிக்குப்பம் கங்கை நகரில் உள்ள நியாய விலை கடைக்கு விரைந்து வந்த அதிகாரிகள் மூதாட்டியை கடைக்கு அழைத்து வந்து பொங்கல் பரிசு தொகுப்பு, வேட்டி சேலை, மற்றும் ரூ.1000 ரொக்க பணம் ஆகியவற்றை வழங்கினர். மேலும் மழை நிவாரணம் ரூபாய் 6 ஆயிரம் பெறுவதற்கு வழிவகை செய்வதாகவும் அதற்கு முதல் கட்டமாக அதற்குண்டான படிவத்தையும் பூர்த்தி செய்து எடுத்துச் சென்றுள்ளனர்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்க பணம் பெற்ற மூதாட்டி மாலைமலர் நாளிதழுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News