தமிழ்நாடு

இந்திய ஜனநாயகம் கடுமையான நெருக்கடியில் சிக்கி உள்ளது- கே.எஸ்.அழகிரி

Published On 2022-08-11 10:03 GMT   |   Update On 2022-08-11 10:03 GMT
  • பா.ஜ.க.வின் தவறான பொருளாதாரக் கொள்கையின் காரணமாக ஏழை, எளிய மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.
  • பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ஏப்ரல் 2022 நிலவரப்படி அதற்கு முந்தைய ஆறு மாதத்தில் 88.1 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

சென்னை:

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய அரசமைப்புச் சட்டப்படி பாராளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக் கொண்டு பல்வேறு ஜனநாயக அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அவை அனைத்தும் கடந்த 8 ஆண்டுகளில் சீர்குலைக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு வருகின்றன.

இந்திய ஜனநாயகம் கடுமையான நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் இந்தியாவின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வின் தவறான பொருளாதாரக் கொள்கையின் காரணமாக ஏழை, எளிய மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். ஆனால், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ஏப்ரல் 2022 நிலவரப்படி அதற்கு முந்தைய ஆறு மாதத்தில் 88.1 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதாவது, ரூ.17.6 லட்சம் கோடி சொத்து குவிக்கப்பட்டிருக்கிறது.

இன்னொரு நண்பரான முகேஷ் அம்பானியின் சொத்து 13.4 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அம்பானிக்கும், அதானிக்கும் நடைபெறுகிற வணிக போட்டியில் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவின் காரணமாக உலக பணக்காரர்களில் நான்காவது இடத்தையும், ஆசியாவில் முதல் இடத்தையும் கவுதம் அதானி கைப்பற்றியிருக்கிறார். இந்த வளர்ச்சியின் அடிப்படையில் தான் பா.ஜ.க.வின் நிதி ஆதாரங்கள் அமைந்துள்ளன. இதுதான் 8 ஆண்டு மோடி ஆட்சியின் சாதனை என்பதா? மெகா ஊழல் என்பதா?

சுதந்திர இந்தியாவின் 75-வது ஆண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடுகிற அதேநேரத்தில் இந்தியாவிலுள்ள மக்களின் வாழ்க்கை நிலை எப்படி இருக்கிறது என்று ஆய்வு செய்கிற போது மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் தான் ஏற்படுகிறது. இத்தகைய அழிவு பாதையில் இருந்து இந்தியாவை மீட்டெடுக்க வேண்டிய கடமை ஒவ்வொரு இந்தியருக்கும் இருக்கிறது. இந்த கடமையை உணர்ந்து பா.ஜ.க.விடமிருந்து இந்தியாவை மீட்டெடுக்க 75-வது ஆண்டு சுதந்திர விழா கொண்டாடுகிற நேரத்தில் இதற்கான முயற்சிகளில் அனைத்து மக்களும் ஒருமித்த உணர்வுடன் ஈடுபட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News