தமிழ்நாடு

100 அரங்குகளுடன் புத்தக திருவிழா வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது

Published On 2022-12-16 06:46 GMT   |   Update On 2022-12-16 06:46 GMT
  • புத்தக திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
  • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, மாவட்ட நூலக அலுவலர் மந்திரம், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம்:

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் மற்றும் காஞ்சிசீபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருகிற 23-ந்தேதி புத்தகத் திருவிழா காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த புத்தக திருவிழா 100 அரங்குகளுடன் அடுத்த மாதம்(ஜனவரி)-2-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணிவரை திறந்து இருக்கும்.

இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் புத்தக திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, மாவட்ட நூலக அலுவலர் மந்திரம், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் புத்தகத் திருவிழாவுக்கான பிரசுரங்களை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டார். மேலும் இது குறித்து குறும்படம் ஒன்றும் வெளியிடப்பட்டது. குறும்படத்தை பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு காண்பிக்கவும், சமூக வலைதளங்கள் மற்றும் உள்ளூர் கேபிள் டி.வி. சேனல்கள் மூலம் ஒளிபரப்பவும் கலெக்டர் உத்தரவிட்டார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கூறும்போது, காஞ்சிபுரத்தில் புத்தக திருவிழா வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. இப்போதைக்கு 100 அரங்குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு சார்பில் இந்த புத்தகத் திருவிழாவிற்கு ரூ.12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நட்சத்திர பேச்சாளர்கள், கலை நிகழ்ச்சிகள், குழந்தைகள் விரும்பும் நவீன அம்சங்கள் ஆகியவை இதில் இடம்பெற உள்ளன என்றார்.

இது குறித்து மாவட்ட நூலக அலுவலர் மந்திரம் கூறும்போது, புத்தக திருவிழாவில் சுமார் 2 லட்சம் புத்தகங்கள் வைக்கப்பட உள்ளதாக கூறினார்.

Tags:    

Similar News