தமிழ்நாடு

ராஜராஜ சோழன் இந்து இல்லை- கமல்ஹாசன் சர்ச்சை பேச்சு

Published On 2022-10-06 08:55 GMT   |   Update On 2022-10-06 08:55 GMT
  • போர்க்கள காட்சிகளை படம் பிடிப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அதில் இருக்கும் கஷ்டம் என்ன என்பது எனக்கு தெரியும்.
  • மக்கள் இது நம் படம் என்கிற மனநிலையில் படத்திற்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

சென்னை:

கல்கி எழுதி, மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.

இந்த நேரத்தில் படம் குறித்து பல்வேறு கருத்துக்கள் பொது வெளியில் பேசப்பட்டு வருகின்றன.

முதலில் இயக்குனர் வெற்றி மாறன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து பேசியபோது, தமிழ் மன்னரான ராஜராஜ சோழனை இந்து மன்னர் என்று மாற்றி விட்டார்கள் என்று பேசவே சர்ச்சை வர ஆரம்பித்தது. இது பற்றிய எதிர் கருத்துக்களும், ஆதரவு கருத்துக்களும் இணையத்தில் தொடர்ந்து பகிரப்பட்டு வந்தன.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் 'பொன்னியின் செல்வன்' படத்தை நேற்று சென்னையில் பார்த்து ரசித்தார். அவருடன் நடிகர்கள் விக்ரம், கார்த்தி ஆகியோரும் பார்த்தனர். படம் பார்த்து விட்டு நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கி விட்டது என நினைக்க தோன்றுகிறது. தமிழ் சினிமா கலைஞனாக இது எனக்கு பெருமிதம்கொள்ளும் நேரம். இந்த புத்துணர்ச்சி நீடிக்க வேண்டும். விக்ரம் பட சாதனையை இந்தப் படம் முறியடித்துள்ளது என்பது சந்தோஷம் தான். அதைக் கொண்டாட தான் நான் இங்கு வந்துள்ளேன்.

ஆரோக்கியமான போட்டி இருப்பதில் தவறில்லை. பிற மொழிகளிலும் இந்தப்படம் கொண்டாடப்பட வேண்டும். சங்கரா பரணம், மரோ சரித்திரா போன்ற தெலுங்கு படங்கள் இங்கு ஓடி வெற்றி அடைந்துள்ளன. இதனால் இதுபோன்ற படங்களை ஒரு சிறிய வட்டத்திற்குள் அடைத்து விடக்கூடாது.

போர்க்கள காட்சிகளை படம் பிடிப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அதில் இருக்கும் கஷ்டம் என்ன என்பது எனக்கு தெரியும். மக்கள் இது நம் படம் என்கிற மனநிலையில் படத்திற்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

இந்து மதம் என்கிற பெயர் ராஜராஜ சோழன் காலத்தில் கிடையாது. சைவம், வைணவம், சமணம் என்றே இருந்தது. அப்போது மதங்கள் வெவ்வேறு இருந்தது. பிரிட்டிஷ்காரர்கள் வந்த பிறகுதான் தூத்துக்குடியை டூட்டுகுரின் என்று சொல்வது போல நம்மை இந்து என்று அழைத்தார்கள்.

இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை என்றும், ராஜராஜ சோழன் இந்து அல்ல என்றும் பொருள்பட அவர் பேசி இருப்பது சர்ச்சை ஆகி உள்ளது.

Tags:    

Similar News