தமிழ்நாடு செய்திகள்

கவர்னர்களை வைத்து மத்திய அரசு அரசியல் செய்கிறது- கி.வீரமணி பேச்சு

Published On 2023-02-06 10:15 IST   |   Update On 2023-02-06 16:49:00 IST
  • மாநில அரசுகளின் உரிமைகளை காப்பாற்ற விடாமல் முட்டுக்கட்டை போட்டால் அது மக்களை அவமதிப்பதற்கு உரிய செயல்.
  • தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மத்திய அரசு கவர்னர்களை வைத்து போட்டி அரசியல் செய்கிறது.

மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் சமூக நீதி பாதுகாப்பு மற்றும் திராவிட மாடல் விளக்க பரப்புரை பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

அனைவருக்கும் அனைத்தும் என்பதே சமூக நீதி. எல்லோருக்கும், எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே சமூக நீதி. தமிழகத்தில் நடந்து வரும் திராவிட மாடல் ஆட்சியில் ஒரு வீட்டில் 4 பெண் குழந்தைகள் இருந்தாலும் அனைவருக்கும் ரூ.1000 நிதி உதவி அளித்தது சமூக நீதி. பெண்கள் படித்தால் ஒரு குடும்பம் முன்னேறும் என சொன்னது திராவிட தத்துவம்.

மேலும் ஆன்லைன் சூதாட்டம் குறித்து கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலேயே திராவிடர் கழகம் தொடர்ந்து அறிவுறுத்தியதன் விளைவாக அ.தி.மு.க.வினர் சில, பல ஓட்டைகளுடன் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினர்.

இதனால் அந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க முடியாமல் போனது. தற்போதைய திராவிட மாடல் ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்வது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து ஓட்டை இல்லாமல் போடப்பட்ட தீர்மானத்தில் கையெழுத்திடாமல் தமிழ்நாடு கவர்னர் காலம் தாழ்த்து வருகிறார்.

இதன் மூலம் மாநில அரசின் உரிமைகளை காப்பாற்ற விடாமல் ஒன்றிய அரசு தடுக்கிறது. மாநில அரசுகளின் உரிமைகளை காப்பாற்ற விடாமல் முட்டுக்கட்டை போட்டால் அது மக்களை அவமதிப்பதற்கு உரிய செயல்.

தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மத்திய அரசு கவர்னர்களை வைத்து போட்டி அரசியல் செய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தி.மு.க., கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News