தமிழ்நாடு செய்திகள்

குற்றாலத்தில் புனித நீராடி மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்

Published On 2023-11-17 11:29 IST   |   Update On 2023-11-17 11:29:00 IST
  • பக்தர்களுக்கு குற்றாலநாதர் கோவில் குருக்கள் மற்றும் குருசாமிகள் துளசி மணி மாலை அணிவித்தனர்.
  • ஐயப்ப பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா முழக்கம் எழுப்பியபடி மாலை அணிந்து கொண்டனர்.

தென்காசி:

தென்காசி மாவட்டத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள குற்றாலநாதர் கோவில் மற்றும் புனித தீர்த்தமாக கருதப்படும் குற்றால அருவிகளில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் நாள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் அதிகாலை முதலே புனித நீராடி குற்றாலநாதர் கோவிலின் முன்பு மாலை அணிந்து 42 நாட்கள் விரதம் தொடங்குவது வழக்கம்.

இன்று காலையில் தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்திருந்த ஐயப்ப பக்தர்கள் மணி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்.

முன்னதாக குற்றாலம் மெயின் அருவியில் புனித நீராடிய பக்தர்கள் புதிய கருப்பு, ஊதா நிறங்களில் ஆன உடைகளை அணிந்து வந்தனர். அவர்களுக்கு குற்றாலநாதர் கோவில் குருக்கள் மற்றும் குருசாமிகள் துளசி மணி மாலை அணிவித்தனர்.

ஐயப்ப பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா முழக்கம் எழுப்பியபடி மாலை அணிந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து 42 நாட்களுக்கு காலை மற்றும் மாலை நீராடி பஜனை செய்து விரதமிருந்து சபரிமலைக்குச் செல்ல உள்ளனர். இன்று ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிந்ததால் காலை முதல் குற்றாலம் மெயின் அருவியில் புனித நீராடுவதற்கு பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

Tags:    

Similar News