குடிப்பழக்கம், கடன், வேலையின்மையால் விரக்தி: ஆண்கள் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சிக்கும் சம்பவம் அதிகரிப்பு
- 2021-ம் ஆண்டில் தீக்காயம் அடைந்து மொத்தம் அனுமதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 864 ஆக இருந்தது.
- தீக்காயம் அடைந்த எண்ணிக்கையில் ஆண்கள் மட்டும் 510 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
தீக்காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்களது உயிரை காப்பாற்றி வரும் பணியில் சிறப்பு மருத்துவமனையாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை விளங்கி வருகிறது.
சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதியிலும் வெடி விபத்து, தற்கொலை முயற்சி, தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைபவர்கள், விபத்து காயங்களால் பாதிக்கப்படும் பெண்கள் என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தீக்காயம் சிகிச்சை அளிப்பதில் இம்மருத்துவமனை சிறப்பிடம் பெற்றுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீக்காயத்தால் பாதிக்கப்படுபவர்கள் கே.எம்.சி.க்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். தீக்காயம் பாதிப்பு 2019-ம் ஆண்டை விட 2022-ம் வருடத்தில் அதிகரித்துள்ளது. 2022-ல் தீக்காயம் வார்டில் 57 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதுவே 2019-ல் 50 சதவீதமாக இருந்து உள்ளது.
மொத்தம் 1292 பேர் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டதில் 652 பேர் ஆண்கள் ஆவர். பெண்களின் எண்ணிக்கை 640 ஆக இருந்தது. 2020-ல் கொரோனா தொற்று பாதிப்பு இருந்த காலத்தில் 832 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் 403 பேர் ஆண்கள்.
இதுவே 2021-ம் ஆண்டில் தீக்காயம் அடைந்து மொத்தம் அனுமதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 864 ஆக இருந்தது. இதில் 485 ஆண்கள் தீக்காயம் வார்டில் சிகிச்சை பெற்றதாக தகவல் தெரிவிக்கிறது.
கொரோனாவுக்கு பிறகு 2022-ல் இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்தது. தீக்காயம் அடைந்த எண்ணிக்கையில் ஆண்கள் மட்டும் 510 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. தீக்காயத்தால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை தீக்காய வார்டில் ஆண்கள் சிகிச்சை பெறுவது அரிதாக இருக்கும். பெண்கள் வார்டில் தான் கூட்டம் அதிகமாக இருக்கும். ஸ்டவ் வெடித்து தீக்காயம் அடைந்து அதிகளவில் பெண்கள் சிகிச்சைக்கு வந்தனர். 1990-ம் ஆண்டுகளில் கணவன்-மனைவி குடும்ப தகராறு, வரதட்சணை கொடுமை போன்றவற்றால் தீ சம்பவம் அதிகளவில் நடக்கும்.
கடந்த 10 வருடம் முன்பு வரை குடும்ப பிரச்சனையில் பெண்கள் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொள்ளும் தற்கொலை முயற்சி சம்பவங்கள நடந்தன. இதனால் ஆண்களுக்கு ஒதுக்கப்பட்ட படுக்கைகள் பெண்களுக்கு மாற்றப்பட்டன. பெண்கள் தீக்காய பாதிப்புகளால் அதிகளவில் வந்தனர்.
ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது. தானே தீ வைத்துக் கொண்டு உயிரை மாய்த்து கொள்ளும் முயற்சியில் இப்போது பெண்களை விட ஆண்கள் அதிகளவில் ஈடுபடுவதாக மருத்துவ பதிவேட்டின் மூலம் தெரியவருகின்றன.
மதுவுக்கு அடிமையாதல், கடன் சுமை, வேலையின்மை போன்றவற்றால் மன அழுத்தம் ஏற்பட்டு ஆண்கள் தங்களுக்கு தானே இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனை தீக்காயம் துறை தலைவர் டாக்டர் நெல்லையப்பர் கூறுகையில், தீக்காயங்கள் ஏற்படுவதற்கு குடிப்பழக்கமே முக்கிய காரணமாக உள்ளது. 20 முதல் 40 வயது வரை உள்ள ஆண்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதற்கான காரணம் மது பழக்கத்திற்கு அடிமையானதுதான் என்றார்.