தமிழ்நாடு

கோடை வெயில் உக்கிரம் அடுத்த வாரம் மேலும் அதிகரிக்கும்- வானிலை மைய அதிகாரிகள் தகவல்

Published On 2024-03-30 07:15 GMT   |   Update On 2024-03-30 07:15 GMT
  • தமிழகத்தில் நேற்று 9 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.
  • அடுத்த 5 நாட்களில் 2 டிகிரி வரையில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படும்.

சென்னை:

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. பகல் நேரங்களில் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் வியர்வை மழையில் நனைந்தபடியே கொளுத்தும் வெயிலில் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்படி பகலில் அதிகரித்து காணப்படும் வெயிலால் இரவு நேரத்திலும் புழுக்கம் அதிகரித்து அனல் காற்றே வீசுகிறது.

தமிழகத்தில் நேற்று 9 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. ஈரோட்டில் அதிகபட்சமாக 104 டிகிரி பதிவாகியுள்ளது. பரமத்திவேலூர், தர்மபுரியில் 102 டிகிரியும், சேலம், திருச்சி, வேலூரில் 101 டிகிரியும், திருத்தணி மற்றும் மதுரையில் 100 டிகிரியை தாண்டியும் வெயில் பதிவாகி காணப்பட்டது.

இதே போன்று வெயிலின் தாக்கம் அடுத்த 5 நாட்களுக்கும் அதிகரித்தே காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பரவலாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். அடுத்த 5 நாட்களில் 2 டிகிரி வரையில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படும்.

படிப்படியாக வரும் நாட்களில் வெயில் அதிகரித்துக் கொண்டே செல்லும் என்று வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தற்போது தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள்.

இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெறும் ஏப்ரல் 2-வது வாரத்தில் தற்போது இருப்பதை விட வெயில் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News